விசாகப்பட்டணம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டத்தில், பேட்டிங் செய்த இந்திய அணி, எந்த விக்கெட்டையும் இழக்காமல் 202 ரன்களை எடுத்துள்ளது.

தனது ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரோகித் ஷர்மா, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சதமடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த துவக்க வீரர் மயங்க் அகர்வால் 84 ரன்களை அடித்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய இருவரும் நிலைத்து நின்று நங்கூரம் பாய்ச்சி தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை பொறுமையிழக்கச் செய்துவிட்டனர்.

என்ன செய்தால் இந்த ஜோடியைப் பிரிக்கலாம் என்று யோசித்தாலும் எதுவும் தோணாத நிலையில் இருந்தனர் அவர்கள். ஃபிலாண்டர், ரபாடா, மகராஜ், பெய்டிட் மற்றும் முத்துச்சாமி ஆகிய தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களால் எதையும் செய்ய முடியாத நிலை.

ரோகித் ஷர்மா 115 ரன்களுடனும், அகர்வால் 84 ரந்களுடனும் களத்தில் இருந்தபோது மழைக் குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் விரைவிலேயே முடிவுக்கு வந்தது. ஆட்டம் நிறுத்தப்பட்டபோது மொத்தம் 59.1 ஓவர்களே வீசப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.