விசாகப்பட்டணம்: இந்திய பவுலர்களின் பிரமாதமானப் பந்துவீச்சால், 94 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து, தோல்வியை நோக்கி வேகமாக சென்று கொண்டுள்ளது தென்னாப்பிரிக்க அணி.

395 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய தனது பயணத்தை, 11 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்த நிலையில், இன்று மீண்டும் தொடங்கிய அந்த அணி, இன்று டஃப் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் அந்த அணியின் கடந்தகால வரலாறுகள் அப்படியானது. கடினமான இலக்குகளையும் கடைசி நாளில் அடிக்கக்கூடிய வல்லமைப் பெற்ற அணி அது.

ஆனால், இன்று இந்தியாவில் அதன் பாச்சா பலிக்கவில்லை. ஷமி மற்றும் ஜடேஜா கூட்டணி அந்த அணியின் பேட்ஸ்மென்களை ஒருவழி செய்துவிட்டது.
குவின்டன் டி காக் மற்றும் டூ பிளசிஸ் என்ற முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் பவுல்டு ஆக்கினார் ஷமி. அவருக்கு கிடைத்த 3 விக்கெட்டுகளும் பவுல்டுதான்.

ஜடேஜாவோ, நேற்று டீன் எல்கர் என்ற ஒரு முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றிய நிலையில், இன்று தனது ஒரே ஓவரில் 3 விக்கெட் கைப்பற்றி, தென்னாப்பிரிக்க அணியின் கதையை கிட்டத்தட்ட முடித்துவிட்டார் எனலாம்.

அந்த அணியில் மார்க்ரம் மட்டுமே அதிகபட்சமாக 39 ரன்களை அடித்தார். கடந்த இன்னிங்ஸில் சதமடித்த குவின்டன் டி காக் இந்த இன்னிங்ஸில் டக் அவுட். தோற்பது உறுதி என்ற நிலையில், தென்னாப்பிரிக்க பவுலர்கள் கடைசி நேர அதிரடிக்கு முயன்று வருகின்றனர்.