1

இன்று ஏகாதேசி திருநாள். மார்கழி மாத வளர்பிறை ஏகாதேசி தினம்வைகுண்ட ஏகாதேசிஎன்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதேசிகள் அன்று விரதமிருந்த நற்பலன்களை இன்று ஒரே நாள் விரதம் இருந்து பெறலாம் என்பதால் முக்கோடி ஏகாதேசிஎன்றும் இந்த திதி போற்றப்படுகிறது.

வைணவ மரபின் தலைநகரம் என்று போற்றப் படும் திருவரங்கத்தில்வைகுண்ட ஏகாதேசி‘ 21 நாட்கள் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை 4:30 மணி அளவில் அரங்க நகரில் வைகுந்த வாசல் திறக்கப்படும்.

முதலில் உற்சவ மூர்த்தியானநம்பெருமாள்பரமபத வாசல் வழியே எழுந்தருளுவார்.

பின்னர் பெரும் திரளென பக்தர்கள் வைகுந்த வாசலில் புகுந்துப் பின் பாம்பனை மேல் பள்ளி கொண்டருளும் அரங்கனையும் தரிசித்து மகிழ்வர்.

ஆன்மாக்கள் நல்வினை தீவினைகளைக் களைந்து, பிறவித் துயரில் இருந்து விடுபட்டு முக்தி நிலையை அடையும் குறிப்பே இவ்வற்புத உற்சவம் உணர்த்தும் உட்கருத்து.

சுவர்க வாசல் என்று இதனைக் குறிப்பது பிழையான பிரயோகம். இந்து சமயக் கோட்பாடுகளின் படி சுவர்க அனுபவம் கால வரையறைக்கு உட்பட்டது. புண்ணியப் பலன்களின் கால அளவு முடிவு பெறும் பொழுது சுவர்க அனுபவமும் நிறைவுற்று ஒரு ஆன்மா மீண்டும் புவியில் பிறவி எடுக்கிறது.

பிறவாமையாகிய முக்திப் பெரு நிலையே நிரந்தர இறை அனுபவத்தைத் தருவது. ஆதலின் இதனை வைகுந்த வாசல் என்று குறிப்பதே மிகவும் ஏற்புடையது.

அனைத்து வைணவ ஆலயங்களிலும் பரம புண்ணிய தினமான வைகுண்ட ஏகாதேசி அன்றுவைகுந்த வாசல்திறக்கும் உற்சவம் நடந்தேறும். அவரவர் செல்ல விரும்பும் திருக்கோயில்களில் (திறப்பு நேரமறிந்து) அதிகாலைப் பொழுதிலேயேவைகுந்த வாசல்புகுந்து அரங்கனின் திருவருளைப் பெற்றுய்வு பெறுவோம்.

                              ஓம் நமோ நாராயணாய!!