நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று தொடங்குகிறது இதையொட்டி அங்குள்ள கொடி மரத்தில் இன்று கொடியேறுகிறது. அதுபோல சென்னை பெசன்ட்நகரில் உள்ள மாதா கோவிலிலும், இன்று கொடியேறுகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுவிழா இன்று தொடங்குகிறது . செப்டம்பர் 8ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. திருவிழாவின் இறுதிநாளான, மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
திருவிழா தொடங்குவதையொட்டி, திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி மாதா பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. இன்று மாலை 5.45 மணிக்கு கொடி கடற்கரை சாலை ஆரியநாட்டு தெரு வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடியேற்றப்படுகிறது. அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் திருவிழா காலங்களில் தினமும் 250 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. திருவிழாவில் கலந்துகொள்ள பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நடைபயணம் மூலம் வேளாங்கண்ணி சென்றுகொண்டிருக்கின்றனர்.
திருவிழாவின் பாதுகாப்புக்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மேற்பார்வையில் 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 110 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார்களும், இது தவிர 5 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 200 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 27 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், 4 டிரோன் மூலமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், சுகாதார துறையின் மூலம் 10 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவப்பணியில் 25 டாக்டர்கள், 87 சுகாதார ஆய்வாளர்கள், 71 செவிலியர்கள் உள்ளிட்ட 158 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவிழாவையொட்டி எந்தவித அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் தீயணைப்பு வீரர்கள் 12 இடங்களில் தீயணைப்பு வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வேளாங்கண்ணியைப் போல சென்னை பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலிலும் இன்று திருவிழா தொடங்குகிறது. இந்த ஆண்டு 50வது ஆண்டு விழா. இதையொட்டி, இன்று மாலை கொடியேற்றுத்துடன் விழா தொடங்குகிறது. 11 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவில், இறை வழிபாடு, தேர் பவனி, திருப்பலிகள் நடைபெற உள்ளன. திருவிழா நாட்களில் காலை, மாலை என இரு வேளைகளில் திருப்பலிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.