சென்னை:
தமிழக அளவில் நடைபெறும் வேலைவாய்ப்பு திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம்களில் அனைத்து மெச்சத்தக்க மாணவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கரூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘‘தமிழகத்தில் 532 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் குறிப்பிட்ட சில கல்லூரிகளில் தான் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி குறைந்தபட்ச மாணவர்களை தேர்வு செய்கின்றன. இது போன்று தனியார் நடத்தும் வேலைவாய்ப்பை கட்டுப்படுத்த எவ்வித விதிமுறைகளும் இல்லை.
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்சாலை கூட்டு மையமும் இணைந்து இந்த திட்டத்தை உருவாக்கின. இதன் கீழ் செயல்படும் அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் நோக்கத்தோடு இந்த திட்டம் தொடங்கப்பட்டது’’ என்று குறிப்பிட்டிருந்தார்
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நாடு முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த பிரச்னையை சுயமாக எடுத்துக் கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘வேலையில்லா இன்ஜினியரிங் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் வேலை திறன் இன்றி வேலை தேடும் நிலை உள்ளது. வேலையில்லா இன்ஜினியரிங் மாணவர்களுக்கு இதர திறன் பயிற்சி அளிக்க மத்திய அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
பல இன்ஜினியரிங் கல்லூரிகள் மனிதசக்தி கொள்கை எதுவும் இல்லாமலே திறக்கப்பட்டுள்ளது. அதிக இன்ஜினியரிங் பட்டதாரிகளை உருவாக்குவது வேலைவாய்ப்பு திண்டாட்டத்தையும், இதர சமூக பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் மட்டும் 660 கல்லூரிகளில் லட்சகணக்கான பி.இ. சீட்களில் சேர ஆளில்லை. அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழு (ஏஐசிடிஇ), அரசு மற்றும் இவை சார்ந்த அமைப்புகளிடம் முறையான கொள்கை இல்லாததே இதற்கு காரணம்’’ என்றார்.
இந்த விவகாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அவசியமாக சேர்க்கப்பட வேண்டும். அதனால் அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இந்த அமைச்சகத்தின் சார்பில் மத்திய அரசின் மூத்த வக்கீல் ராபு மனோகர் நோட்டீஸை ஏற்றுக் கொண்டார்.
நோட்டீசில், ‘‘ நாட்டில் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ள திட்டம் எதுவும் உள்ளதா? என்பதற்கு பதில் அளிக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த திட்டத்தின் விபரத்தை தெரிவிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, சட்ட கல்வி தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில் ‘‘லெட்டர் பேடு சட்டக்கல்லூரிகள் மூலம் அதிகளவில் சட்ட மாணவர்கள் உருவாகிறார்கள். இதனால் சமூகத்திற்கு தேவையான அளவை விட வக்கீல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்புகள் இல்லாததால் வக்கீல்கள் வாழ்வாதாரத்திற்காக சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு பார் கவுன்சில் தான் பொறுப்பு’’ என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது தான் ஏடிசிடிஇ.க்கு நீதிபதி சில கேள்விகளை எழுப்பினார்.
* நாட்டில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளின் மாநில வாரியான பட்டியல்?.
*ஆண்டு தோறும் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்?.
* எத்தனை மாணவர்கள் ஆண்டுதோறும் படிப்பை வெற்றிகரமாக முடிக்கிறார்கள்?.
* வேலையில்லாமல் இன்ஜினியரிங் பட்டதாரிகள் அவதிப்படுவது ஏஐசிடிஇ.க்கு தெரியுமா?.
* இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை போதுமானது என்றால் கூடுதலாக உள்ள கல்லூரிகளை மூடும் திட்டம் உள்ளதா?.
* மனித சக்தி கொள்கை ஏதும் வகுக்கப்பட்டுள்ளதா?.
* இன்ஜினியரிங் மாணவர்களிடம் திறன் குறைவாக இருப்பது உண்மைதானா?.
* வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேறு பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளதா?.
* வேலைவாய்ப்பு பெற்றுள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவு?.