வாஷிங்டன்:

அமெரிக்காவை சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் சிப்பந்தியாக பணியாற்றி வருபவர் ஷீலா பெர்டரிக். இவர் 10 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.


சில நாட்களுக்கு முன் சீட்டேல் நகரிலிருந்து விமானத்தில் பயணித்தபோது 14 வயது சிறுமியை பார்த்தார். சிறுமிக்கு அருகில் உட்கார்ந்திருந்த நபர் டிப்டாப் உடையிலும், சிறுமி அழுக்கான ஆடையையும் அணிந்திருந்ததால் ஷீலாவுக்கு சந்தேகம் எற்பட்டது.
இதை தொடர்ந்து சிறுமியிடம் அவர் பேச்சுக் கொடுத்தார். ஆனால், சிறுமியிடம் கேட்ட கேள்விகளுக்கு அருகில் இருந்த நபரே இடைமறித்து பதில் கூறினார். இதனால் அந்த நபர் மீது சந்தேகம் அதிகரித்தது. கண் ஜாடை காட்டி சிறுமியை விமான கழிப்பிடத்துக்கு வரச் சொன்னார்.

கழிப்பிடத்தில் ‘நீ ஏதும் பிரச்னையில் சிக்கி இருக்கிறாயா? உனக்கு உதவி எதுவும் வேண்டுமா?’ என பேப்பரில் எழுதி வைத்துவிட்டு பணிப்பெண் வெளியே வந்தார். சிறுமி கழிவறைக்கு சென்று அந்த பேப்பரை படித்துவிட்டு ‘ஆமாம், என்னை அந்த நபர் கடத்தி செல்கிறார். எனக்கு உதவி தேவை’ என பதில் எழுதி வைத்து விட்டு இருக்கைக்கு திரும்பினார்.

சிறுமியின் பதிலை கண்டு ஷீலா அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் உடனடியாக விமானிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. விமானிகள் சான் பிரான்ஸிஸ்கோ நகர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

விமானம் தரையிறங்கியதும் அங்கு காத்திருந்த போலீசார் அந்த நபரை கைது செய்து சிறுமியை மீட்டனர். சிறுமியை தனது சமயோசித புத்தியால் மீட்க உதவிய ஷீலாவை போலீசார் பாராட்டினர்.