சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜயகாந்தின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்தின் நடிப்பு பலரின் இதயங்களை கவர்ந்தது. பொது சேவையில் ஈடுபாடு கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. விஜயகாந்துடனான எனது நினைவுகளை அன்புடன் நினைவூ கூர்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேமுதிக நிறுவனர் திரு விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.