1444712430-0627

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்க தொண்டர்களுக்கு உத்தரவிட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவிக்கிடக்கிறது. ஆனால், அவர் கைது செய்யப்படமாட்டார் என்று சில தரப்பினர் கூறுகிறார்கள்.

தஞ்சையில் நேற்று விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பேருந்து நிழற்குடையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழிக்குமாறு விஜயகாந்த் உத்தரவிட்டார். இதனால் அதிமுகவினர் கொந்தளித்து கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட பதில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தே.மு.தி.க தஞ்சை ஆர்ப்பாட்டம்
தே.மு.தி.க தஞ்சை ஆர்ப்பாட்டம்

இதனிடையே முதல்வர் ஜெயலலிதா படத்தை கிழித்ததாக விஜயகாந்த் உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விஜயகாந்த் உட்பட 37 பேரையும் காவல்துறையினர் கைது செய்யகைது செய்வதில் தீவிரமாக இருப்பதாக தகவல் பரவியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விஜயகாந்த் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையே விஜயகாந்த் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என முதல்வர் ஜெயலலிதா திடீர் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீடு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் ஆகியவற்றின் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் எல்லாம், விஜயகாந்த் கைது செய்யப்படுவார் என்ற தகவல் பரவியிருக்கிறது.

அதே நேரம், “விஜயகாந்த் கைது செய்யப்பட மாட்டார்” என்று சில தரப்பினர் கூறுகின்றனர். அவர்கள், “சமீபத்தில் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார் விஜயகாந்த். அப்போதிலிருந்தே அவரது உக்கிரம் அதிகமாகிவிட்டது. அப்போது சிகிச்சை பெற்று வந்தவர், தனது முகத்தை மூடியபடியேதான் விமான நிலையத்தில் இறங்கினார்.

அந்த அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் சமீப காலமாக மிக அதிகமாக ஆத்திரப்பட ஆரம்பித்திருக்கிறார். அதன் விளைவே, தஞ்சையில், அ.தி.மு.க. பேனரை கிழிக்கச் சொல்லி உத்தரவிட்டது.

அவர் கைது செய்யப்பட்டால் அவர் மீது அனுதாபம் ஏற்படும்.  தவிர கைது நேரத்தில் அவரது உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் அனுதாபம் கூடும். ஆகவே தேர்தல் நெருங்கும் வேளையில், கைது நடவடிக்கை இருக்காது. அதே நேரம், அவரை டென்சன் ஆக்கும் விதத்தில் நடவடிக்கைகள் இருக்கும்” என்கிறார்கள்.

ஆனால், தே.மு.தி.க. வட்டாரத்தில், விஜயகாந்த் கைது செய்யப்படுவாரோ என்கிற பதட்டம் நிலவுகிறது.