kumari ananthan
தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரிஅனந்தன் வெளியிட்ட அறிக்கையில்,
”பீகார் சட்டசபையில் மதுஒழிப்பு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி சட்டமாக்கி இருக்கிறார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார். வள்ளுவர் வழியில் பீகார் நடைபோட தொடங்கிவிட்டது. ஆனால், வள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டிலோ மது ஆறாக ஓடுகிறது.
மது வேண்டாம் என்று ‘நமக்கு இலக்கு- மது விலக்கு’ என்ற முழக்கத்தோடு 800 கி.மீ. நடைப்பயணத்தை சென்னையில் ராஜாஜி பிறந்தநாளில் நானும், நண்பர்களும் தொடங்கியபோது மத்திய, மாநில கட்சிகளை தவிர்த்து அனைத்துக்கட்சி தலைவர்களும், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பெருமக்களும் வாழ்த்தி வழியனுப்பியது, தமிழக மக்கள் மதுவை வெறுக்கிறார்கள் என்பதை தெள்ளெனக் காட்டியது. எங்கள் நடைபயணத்துக்கும் தெம்பினை ஊட்டியது.
இப்போது கள் வேண்டுவோர் இயக்க தலைவர் நல்லசாமி, திருச்சியில் கள் விற்க போகிறேன் என்று அறிவித்துள்ளார். வேண்டாம் இந்த விபரீத செயல் என்று நல்லசாமியை கேட்டுக் கொள்கிறேன். அறிஞர்களின் கருத்தை மதித்து தன் திட்டத்தை நிறுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். இன்றேல் சட்டம் அதன் கடமையை செய்ய வேண்டும்’’என்று கூறியுள்ளார்.