சென்னை: பெண்களின் மேம்பாடு மற்றும் சுய முன்னேற்றத்தை இலக்காக கொண்டு செயல்படும் MAuto என சுருக்கமாக அழைக்கப்படும் மக்கள் ஆட்டோ என்ற அமைப்பு, தனது ஓட்டுநர்களாக, திருநங்கைகள் மற்றும் புர்கா அணிந்த இஸ்லாமியப் பெண்களையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த மக்கள் ஆட்டோ அமைப்பில், ஏற்கனவே 330 பெண் ஓட்டுநர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் ‘டிரைவர்கள்’ என்று அழைக்கப்படுவதற்கு பதிலாக, ‘பைலட்டுகள்’ என்றே அழைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களின் சொந்தக் காலில் நிற்க உறுதிபூண்டு, தைரியமாக முன்வரும் பெண்கள் மட்டுமின்றி, திருநங்கைகளின் மீதும் அக்கறை கொண்டு, அவர்களுக்குப் பயிற்சியளித்து, ஆட்டோ ‘பைலட்டுகளாக’ மாற்றுகிறது இந்த அமைப்பு.
இதுவரை, 5 பயிற்சிபெற்ற திருநங்கைகள், MAuto கால் சென்டரில் பணிவாய்ப்பு பெற்றுள்ளார்கள். தகுதியான திருநங்கைகளைப் பெறும் விஷயத்தில், MAuto அமைப்பானது, திருநங்கைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக செயல்பட்டுவரும் ‘Born to Win’ என்ற அமைப்பின் உதவியை நாடுகிறது.
இந்த MAuto அமைப்பு, தற்போதைய நிலையில், சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இவர்களின் Mobile App மூலமாக, அதன் பயனர்கள், தங்களுக்கு ஆண் ஓட்டுநரா, பெண் ஓட்டுநரா அல்லது திருநங்கை ஓட்டுநரா என்பதில், வேண்டியதை தேர்வு செய்யலாம்.
இந்த MAuto சேவை, இந்த மார்ச் மாத இறுதியில், கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் விரிவாக்கப்படவுள்ளதாக, அதன் நிறுவனர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.
– மதுரை மாயாண்டி