சென்னை: பெண் நிர்வாகியின் சகோதரி தாக்கப்பட்டது தொடர்பாக, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை வலைவீசி தேடி வரும் டிநிலையில், அவர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி சென்னை வருகையின் போது ஆட்களை அழைத்து வர, பாஜ மாவட்ட துணை தலைவர் ஆண்டாள் என்பவரிடம் ரு.50ஆயிரம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் சொன்னபடி ஆட்களை அழைத்து வரவில்லை என்பதால், கொடுத்த திரும்ப கேட்டு அமர்பிரசாத் தனது ஓட்டுனர் உள்பட சிலரை அனுப்பியதாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில், கோட்டூர்புரத்தில் உள்ள ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி தேவி யாருக்கு அடி விழுந்தது. இதில், தேவி படுகாயம் அடைந்தார்.
இதுதொடர்பாக பாஜ பெண் நிர்வாகி ஆண்டாள், சகோதரி தேவி ஆகியோர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, கோட்டூர்புரம் போலீசார் பாஜ மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிரசாத், சைதாப்பேட்டை கிழக்கு மண்டல துணை தலைவரும் அமர்பிரசாத் ஓட்டுனருமான ஸ்ரீதர், பாஜ பெண் நிர்வாகிகள் நிவேதா, கஸ்தூரி உள்பட 6 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147, 452, 323, 324, 354, 427, (506)(1), 109 குற்றச்செயலுக்கு உடந்தையாக இருத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன், தாக்குதலில் ஈடுபட்ட அமர்பிரசாத் கார் ஓட்டுனரான ஸ்ரீதரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். மேலும் அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனால், தலைமறைவான அமர்பிரசாத் ரெட்டி, முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.