a

மும்பை:

பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுதீந்திர குல்கர்ணி மீது இன்று சிவசேனை ஆதரவாளர்கள் கறுப்பு ஆயில் பெயிண்ட்டை கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகராஷ்டிர மாநிலத்தில் பா.ஜ.க. – சிவசேனை கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முஸ்லீம்களுக்கெதிரான கடும் நிலைப்பாடு எடுத்தே வளர்ச்சி பெற்று இன்று மகராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு வந்திருக்கும் சிவசேனை, பாகிஸ்தான் தொடர்பில் எவரும் தங்கள் கோட்டையில் மூச்சு கூட விடக்கூடாது என மிரட்டுகிறது.

சிவசேனையின் கோட்டையாக கருதப்படும் மும்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் குழு அனுமதிக்கப்படுவதே இல்லை. அண்மையில்கூட கசல் பாடகர் குலாம் அலியின் நிகழ்ச்சி சிவசேனை மிரட்டலால் கைவிடப்பட்டது

இந்த நிலையில்தான் பாகிஸ்தானின் வெளி உறவுக்கொள்கை பற்றி அந்நாட்டில் வெளி உறவு அமைச்சராக இருந்த குர்ஷீத் மொஹம்மது கசூரி எழுதிய புத்தகத்தை மும்மையில் வெளியிட திட்டமிடப்பட்டது. இந்த கசூரி, முஷ்ரப் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்.

புத்தக வெளியீட்டுக்கான ஏற்பாட்டை செய்தவர் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுதீந்திர குல்கர்ணி. அவர் மீது இன்று கறுப்பு ஆயில் பெண்ட்டை வீசிக் கொட்டி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது சிவசேனை.

பாஜகவைச் சேர்ந்த முதல்வர் ஃபட்னவிஸ் பம்முகிறார். முறையாக விசா பெற்று வருவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் ஆனால் அவர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் எனப் பொருள் கொள்ளக்கூடாது என்கிறார்.

புத்தக வெளியீடு நடந்தே தீரும் என குல்கர்னி, முகமெல்லாம் கறுப்பு பெயிண்ட் வழிய செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என இன்னமும் சிவசேனை பிடிவாதம் பிடிக்கிறது.

“குல்கர்னி, அத்வானிக்கு நெருக்கமானவர். அத்வானிக்கும் மோடிக்கும் ஆகாது இந்நிலையில் அத்வானிக்கு நெருக்கமான ஒருவரை இப்படி தாக்கினால் தங்கள் செல்வாக்கு உயரும் என்று சிவசேனை நினைக்கிறதா, முதல்வர் ஃபட்னவிசும் என்ன நடக்கிறதோ நம்க்கேன் வம்பு என்று ஒதுங்குகிறாரா?   இல்லை இது வழக்கமான சிவசேனை ரவுடியிசமா?” என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

த.நா.கோபாலன்