டில்லி

டைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாலிவுட் திரைப்பட நடிகர்களை கொண்டு  பிரசாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது 5 மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி இம்மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.   இந்த தேர்தல் பிரசாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவினர் தங்கள் தலைவர்களை விடத் திரைப்பட நடிகர்களை மிகவும் நம்பி உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.   இந்த தேர்தலில் பல பெரிய நடிகர்களைப் பிரசாரத்தில் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சோனு சூட் பல உதவிகளை கொரோனா கால கட்டத்தில் செய்துள்ளார்.  அவரை பாஜக மேற்கு வங்க மாநில பிரசாரத்தில் களம் இறக்க உள்ளது.   மேலும் பாலிவுட் பிரபலங்களான அனில்கபூர், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரும் பல மாநிலங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் தமிழகமும் விதி விலக்கில்லை.   குறிப்பாகச் சென்னை நகரில் வட மாநிலத்தவர் அதிகமாக உள்ள  பகுதிகளில் இந்தி நடிகர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.   இதைப் போல் மாநிலத்தின் மற்ற இடங்களில் பாஜக மக்களவை உறுப்பினரும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஹேமாமாலினி பிரசாரம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.   இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர் தமிழிலேயே பேசி பிரசாரம் செய்ய உள்ளார்.

இது குறித்து, ”முன்பு ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் முரளி, சிம்ரன் உள்ளிட்ட பல பிரபலங்களை அதிமுக களத்தில் இறக்கியது,.  ஆனால் அப்போது அதிமுக தோல்வி அடைந்தது.   அதைப் போல் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவை திமுக களத்தில் இறக்கிய போது திமுக தோல்வி அடைந்தது.  அவ்வளவு ஏன்? சிவாஜி கணேசன் கட்சி தொடங்கிப் படு தோல்வி அடைந்தார்” என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.