பாரிஸ்

பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் ஈ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் ஐநாவிடம் கோரிக்கை விடுக்க உள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 44  சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. உலகெங்கும் உள்ள பல தலைவர்கள் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் ஈ முகமது தலைவர் மசூத் அசாரை கைது செய்ய வேண்டும் என பல உலக நாடுகள் பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளன. இந்த இயக்கத்துக்கு பிரான்ஸ் நாடு ஆதரவு அளித்ததாக கூறப்பட்டு வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என பிரிட்டன் ஐநா சபைக்கு கோரிக்கை விடுத்தது. அப்போது சீனா அதை தடுத்து விட்டது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம், “இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான அரசியல் உறவு குறித்து நேற்று இரு நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிரான்ஸ் அரசியல் உறவு ஆலோசகர் பிலிப் எடியன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த பேச்சு வார்த்தையின் போது மசூத் அசாரை பயங்கர வாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாவுக்கு கோரிக்க அனுப்ப பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்படும். நாங்கள் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என அறிவித்துள்ளார்.