இஸ்லமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படுவதாக, அவரது முன்னாள் மனைவி ரேகம் கான் கூறியுள்ளார்.

இந்தியா போர் தொடுத்தால் அதனை எதிர்கொண்டு பழிவாங்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பிரதமர் இம்ரான் கான் கூறி இருந்தார்.

இதுகுறித்து இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேகம் கான் கூறியிருப்பதாவது;

காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறும் இம்ரான் கான், இந்தியா போர் தொடுத்தால் பழிக்குப் பழி வாங்குவோம் என்கிறார்.

கொள்கையை சமரசம் செய்து கொண்டே இம்ரான் கான் ஆட்சிக்கு வந்துள்ளார். எதையும் ஒரு நிமிடம் கூட சிந்திக்க மாட்டார். அதுதான் அவரது கொள்கை. அவர் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று ராணுவத்தால் அறிவுறுத்தப்படுகிறார்.

தேர்தல் நேரத்தில் தீவிரவாத மதவாத கட்சிகள் புதிதாக தோன்றியதையும், அப்போது இஸ்லமாபாத்தில் வன்முறையும்,கலவரமும் வெடித்ததையும் நாம் பார்த்தோம்.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக நாம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க விரும்புகிறார். பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதுதான் நாட்டின் நலனுக்கு உகந்தது.

கடந்த 7 மாதங்களாக பிரதமர் இம்ரான் கான் தீவிரவாதத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜெய்ஸ் இ முகமது குழுவோடு பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த குழு மீது நாம் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற எண்ணம் உள்ளது.

இந்தியாவுக்கு இம்ரான் கான் அளித்துள்ள பதில் அவராக கொடுத்ததில்லை. ராணுவத்தினரின் பதிலைத்தான் அவர் மூலம் சொல்ல வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

.