டில்லி

புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்துக்கு இந்தியா பதில் அளித்துள்ளது.

கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை  தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்துளனர். இந்த தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்தியா இந்த தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு அளித்த அனைத்து வர்த்தக் சலுகைகளையும் திரும்பப் பெற்றது. அந்நாட்டுக்கு அளித்த வர்த்தகத்துக்கு உகந்த நாடு என்னும் அந்தஸ்து திரும்ப பெறப்பட்டது.

பிரதமர் மோடி இந்த தாக்குதலால் தமது நெஞ்சில் ஒரு தீ எரிவதாகவும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பெரிய விலை அளிக்க வேண்டி இருக்கும் எனவும் எச்சரித்தார்.

இன்று புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்தியா ஆதாரம் அளித்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினார்ல் நாங்கள் பதிலடி கொடுப்போம்” என கூறினார்.

இந்திய வெளியுறவுத் துறை இன்று அளித்த இம்ரான்கானுக்கு அளித்த பதிலில், “தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாவட்டத்தில் உள்ளார். அவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ளது அனைவருக்கும் தெரியும்.” என குறிப்பிட்டுள்ளது.