z

சங்க-2. தமிழ்த்திரைக்கடலில் அரிதாய் கிடைத்துள்ள முத்து… சண்டை,காதல்,ரவுடித்தனம் என்பது போன்ற கதைக்களத்தில் சலிக்காமல் பயணித்து இப்போது பேய் படங்களுக்குள் தஞ்சமடைந்திருக்கும் தமிழ் சினிமாவை தலை நிமிர்த்தியுள்ள படம். “A” படங்கள் வரும் சமூகத்தில் “CS” படங்கள் “ Childrens Special” எடுக்க முடியாதா என்று பலமுறை எனக்குள் கேள்வி கேட்டிருப்பேன்… இதோ, காக்கமுட்டைக்கு அடுத்தபடியாக வந்துள்ள பசங்க-2 ஒரு “CS” ரகம்.

2007ல் அமீர்கான் நடித்த ”தாரே ஜமீன் பர்”(ஹிந்திப் படங்க.. நமக்கும் ஹிந்தியெல்லாம் புரியாது..ஆனா, படம் புரிஞ்சுது) படம் வந்தப்ப, மக்கள் சக்தி இயக்கத்தின் “நம்மால் முடியும்” இதழில் ”…இது படமல்ல…பாடம்” என்று எழுதினோம். இந்த ஹிந்திப்படத்தை யாரேனும் தமிழ் வடிவில் எடுக்கமாட்டார்களா…குறைந்தபட்சம் தமிழ் டப்பிங்காவது செய்து வெளியிடமாட்டார்களா என்று அப்போது தோன்றியது. அந்தக்குறை பசங்க-2 மூலம் நிறைவேறியுள்ளது… முழுக்க முழுக்க அப்படத்தின் தழுவல் என்று கூறமுடியாது, இருந்தபோதும் இரண்டு படத்தின் மையக்கருவும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

பசங்க-1ல் கிராமத்து மக்களின் வாழ்க்கைக்குள் ஏரோட்டிய இயக்குனர் பாண்டிராஜ், பசங்க-2ல் நகரத்து அடுக்குமாடி பிளாட்களின் வாழ்க்கையை ஹெலிகாப்டர் மேலிருந்து பார்ப்பது போன்ற உணர்வைத் தந்துள்ளார்.

சமகாலக் கல்வி வியாபாரம், மருத்துவ பிசினஸ் என்று சமூக நிறுவனங்களை தோலுரித்துக் காட்டியதோடு நின்றுவிடாமல் குழந்தைகள்-பெற்றோர்கள் உறவுமுறை, வாழ்க்கையில் எதுவெற்றி-எது தோல்வி என தனிமனிதனுக்குத் தேவையான குணங்களை அழகான காட்சிகள் மூலம் அடையாளம் காட்டியுள்ளார் இயக்குனர். குறிப்பாக படத்தின் துவக்கக் காட்சி.

“குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை… அவர்கள் “கேட்ட” வார்த்தைகளைத்தான் பேசுவார்கள்” என்ற வசனத்தின் மூலம் கெட்ட வார்த்தைகள் பேசும் அப்பா ஒருவருக்கு அவரின் குழந்தை ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறான் என்பதைப் புரியவைக்கும்விதம் அருமை.

கருவுற்ற தாய்மார்கள் ஆரோக்யமான குழந்தையைப் பெற்றெடுப்பது எப்படி என்று ஓரிரு நிமிட காட்சிகள் மூலம் அழகாக மகப்பேறு மருத்துவ வகுப்பெடுத்துச் செல்கிறார் இயக்குனர்.. கருவுற்ற அம்மா-டீச்சர் என இளம் நடிகைகள் நடிக்கத்தயங்கும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஒத்துக்கொண்ட அமலா பாலுக்கும் பாராட்டுக்க்ள்.

“Family Planning” என்பது குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதல்ல.. கருவிலிருக்கும் குழந்தையும் கேட்டுக்கொண்டிருக்கும், கற்றுக்கொண்டிருக்கும்… ஆகவே, கருவிலிருந்து-குழந்தை பிறக்கும்வரை அதோடு பேசி,விளையாடி மகிழ்ந்து குழந்தையைப் பெற்றெடுப்பதே “Family Planning” என்று அந்த வார்த்தைக்கு புது அர்த்தம் கொடுத்துள்ளது இப்படம்.

“பள்ளிக்கூடத்தை தனியார் நடத்துகிறது ; சாராயக் கடையை அரசு நடத்துகிறது” என்ற போராட்ட-ஆர்ப்பாட்டக் கள வசனத்தை வெகுஜன ஊடகத்தில் புகுத்தியதற்காகவே பாண்டிராஜீக்கு ஒரு சிறப்பு சபாஷ் போடலாம்.

புத்திமதி சொல்லும் செயற்கைத்தனமான காட்சிகள், வலிந்து புகுத்திய வசனங்கள்(சமுத்திரக்கனி காட்சிகள்) என்பது போன்ற பிசிறுகள் இருந்தாலும் அந்தக் காட்சிகள், வசனங்கள் சொல்லும் செய்தி வலுவானதாக உள்ளதால் அவையும் வரவேற்புக்குள்ளாகிறது.

ஹாஸ்டலில் குழந்தைகளின் நிலை- இறுதிக்காட்சியில் வரும் “சிட்டுக்குருவி” கதை – கண்ணில் தண்ணீர் வரவழைக்கிறது.

படம் எப்படிமா இருந்துச்சு..? ”….நான் பாத்ததுல இதுதாம்பா பெஸ்ட் படம்… என் ஃப்ரெண்ட்ஸ் கூட வந்திருந்தா கண்டிப்பா அழுதுருப்பேன்… எங்க உணர்வுகளை அப்படியே படமா எடுத்திருக்காங்க” இதுதான் மகளின் இருவரி கருத்து.

வீட்டில் இருக்கும்போது செல்போன், வாட்ஸ் அப்பிற்கு கணிசமாக நேரம் ஒதுக்கும் கணவன்களுக்கு படம்பார்க்கும்போது பக்கத்தில் இருக்கும் மனைவியிடமிருந்து செல்லமாய் கன்னத்தில் ஒரு இடியோ, அல்லது அடியோ விழுவது நிச்சயம்.. அதுபோன்ற காட்சிகள் வரும்போது “வாட்ஸ் அப் வீரர்கள்” கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குட்டிப் பையனின் அப்பா ஆசைக்காகத் திருடும் காட்சிகள் படத்தின் ஓட்டத்தோடு அவ்வளவாக ஒட்டவில்லை. படத்தின் வேகத்தடை. கத்தரி வைத்திருக்கவேண்டிய காட்சிகள் அவை.

படத்தின் உண்மைக் கதாநாயகர்களான அந்தச் சுட்டிப்பையனையும், பாப்பாவையும் பாராட்டியே தீரவேண்டும். அதுவும், “நைனா” பாப்பா.. அப்பப்பா… – ராமாயணத்துக்குள்ள டோரா- ஸ்பைடர் மேன் – வெச்சு சொல்ற கதை, ஹாஸ்டல்ல சொல்ற பேய்க்கதை என எல்லா இடத்திலும் கைதட்டல்களை அள்ளிச் செல்கிறாள்.

வழி சொல்றதுக்கு எதுக்கு டோரா வேணும்னு அப்பா கேட்க… “…இதுக்குத்தான் கொஞ்சமாவது குழந்தைகளோடு நேரம் செலவழிக்குனும்னு சொல்றது… டோரா.. கையில மேப் இருக்கும்.. அதுக்கு எல்லா வழியும் தெரியும்”னு நைனா பாப்பா போட்டு உடைக்க…அப்பா அசடு வழிய.. காட்சி அருமை.

படத்தில் மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால் “தீர்வுகளைச் சொன்னது.. அல்லது குறைந்தபட்டசம் கோடிட்டுக் காட்டியது”. பொதுவாக எந்தப் பிரச்னைபற்றியும் எளிமையாக விமர்சித்துவிடலாம் ஆனால் அப்பிரச்னைக்கு தீர்வு சொல்ல எல்லோராலும் முடியாது.
அந்த வகையில், சமகால கல்விமுறை, மருத்துவமுறையை விமர்சித்த கையோடு – ஒரு பள்ளி எப்படி நடத்தப்பட வேண்டும் – ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் – ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் – ஒரு அப்பா-அம்மா எப்படி இருக்க வேண்டும் என ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுகளாக வாழும் கேரக்டர்களை படத்தில் வைத்தது அருமை. ( படத்தில் காட்டியதுபோல், ஒவ்வொரு பள்ளி வகுப்பறையும், குழந்தைகளை சிரிக்க வைத்துவிட்டு பாடங்களை நடத்தத் தொடங்கினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்…)

சினிமா…
சிகரெட் பிடிக்க கற்றுக்கொடுக்கும்…
பாருக்குச் செல்ல பழக்கப்படுத்தும்…
பெண்களைக் கேலி செய்ய கற்றுக்கொடுக்கும்…
மூடப்பழக்கவழக்கத்தை தாங்கிப் பிடிக்கும்…
கருப்புப் பணத்தை உருவாக்கும், பெருக்கும்…
அரசியலின் அடிப்படையைத் தகர்க்கும்..

என சினிமா மீது எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும்…

கத்தியை அறுவை சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம், ஆளைப் போட்டுத் தள்ளவும் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் பார்த்தால் காக்கா முட்டை, பசங்க-2 போன்ற படங்கள் சினிமா எனும் ஆயுதத்தை சமூகத்தின் நோய்களை அடையாளம் காட்டி, தீர்வுகளை சுட்டிக்காட்டும் பணிக்குப் பயன்படுத்திக்கொண்டன. பல படங்கள், மேற்சொன்னதுபோல் சமூகத்தில் நோய்பரப்பும் கிருமிகளாக வெள்ளிதோறும் வெளிவருகிறது…

கிருமிகளுக்கு மத்தியில் நோய்த்தடுப்பு மருந்து வீசும் பணி செய்த இயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும்… இப்படம் உருவாக வாய்ப்பளித்த சூர்யாவுக்கும் கொஞ்சம் பாராட்டுகள் சென்று சேர வேண்டும்.

குடும்பதோடு போய்ப் பாருங்க… தியேட்டர்ல…!

– செந்தில் ஆறுமுகம்