சென்னை
வங்கக்கடலில் நாளை உருவாக உள்ள புயலுக்கு மொக்கா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேற்று தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழுவுப் பகுதி ஒன்று உருவாகி உள்ளது/ அது படிப்படியாக வலுவாகி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக உருமாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலுக்கு ஏமன் நாடு தங்கள் நாட்டின் துறைமுக நகரின் பெயரான மொக்கா என்னும் பெயரைப் பரிந்துரைத்துள்ளது/ எனவே இப்புயலுக்கு மொக்கா எனப் பெயரிடப்பட உள்ளது.
இந்திய வானிலை ய்வு மையத் தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம், “கடந்த 1891 ஆம் ஆண்டு முதல் இந்திய வானிலை ஆய்வு மையம் நாட்டின் வானிலை தரவுகளைப் பதிவு செய்து, பாதுகாத்து வருகிறது. அதன்படி தமிழகத்தை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் கடந்த 132 ஆண்டுகளில் மொத்தம் 530 புயல்கள், தீவிர புயல்கள் உருவாகியுள்ளன.
இதில் அதிகபட்சமாக நவம்பரில் 124, அக்டோபரில் 93, மே மாதத்தில் 65 புயல்கள் உருவாகியுள்ளன. நாம் பொதுவாகக் கோடைக் காலம் என்றால் கடும் வெயில் வாட்டும் என்றுதான் கருதுகிறோம். இருப்பினும், அப்போது புயலும் வரும். இது போல மே மாதத்தில் புயல் உருவாவது வழக்கமானதுதான் என்பதே நிஜம். இது அரிதான நிகழ்வு இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.