IMG-20160222-WA0018
 
சென்னை:
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. கடந்த மாதம் 24–ம் தேதி தொடங்கி இந்த மாதம் 10–ந்தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
விருப்பமனு அளித்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நேர்காணல் தொடங்கியது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேர்காணல் நடத்தினார்கள்.
இன்று காலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு மனு செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
முதலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிக்கு மனு செய்தவர்கள் கலந்து கொண்டார்கள். .
கன்னியாகுமரி தொகுதிக்கு 27, நாகர்கோவிலுக்கு 26, குளச்சல் தொகுதிக்கு 25, பத்மநாபபுரத்துக்கு 28, விளவங்கோடுக்கு 15, கிள்ளியூர் தொகுதிக்கு 14 பேர்  என கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிக்கும் 135 பேர் மனு செய்து இருந்தார்கள்.
அவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு  நேர்காணல் நடத்தப்பட்டது. தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, போட்டியிடுவோரின் பின்னணி உள்பட பல தகவல்கள் கேட்கப்பட்டன. அதற்கு விருப்ப மனு கொடுத்தவர்கள் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன.
“முக்கியமாக தொகுதியில் அதிகமாக உள்ள சாதியினர், வேட்பாளரின் சாதி, சொத்து விவரங்கள், எதிர்கட்சிகளில்.. முக்கியமாக அ.தி.மு.க.வில் முக்கிய புள்ளிகள் யார் ஆகிய கேள்விகள் கேட்கப்பட்டன” என்று, நேர்காணலில் கலந்துகொண்ட பிரமுகர் ஒருவர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஆஸ்டின், சிவராஜ், மகேஷ், பார்த்தசாரதி, சாய்ராம், ராதாகிருஷ்ணன், அருணாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். .
ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஐ.ஜி. ஜான் நிக்கசல்சன் பத்மநாபபுரம் தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்து இருந்தார். அவரும் இன்று நேர்காணலுக்கு தி.மு.க. கரை வேட்டி கட்டி வந்து, கலந்து கொண்டனர். இவர் பாளையங்கோட்டை, அம்பா சமுத்திரம், நான்குநேரி, தென்காசி ஆகிய தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்.
முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அம்பா சமுத்திரம் தொகுதிக்கு விருப்ப மனு அளித்திருந்தார்.  அவரும் இன்றைய நேர் காணலுக்கு வந்தார்.
இன்று மாலை விருதுநகர், தேனி, திண்டுக்கல், மாவட்ட தொகுதிகளுக்கான நேர் காணல் நடக்கிறது.  இதில்  கலந்து கொள்ள வந்தவர்களுடன், அந்தந்த மாவட்ட கட்சி பிரமுகர்களும் வந்திருப்பதால் அறிவாலயத்தில் ஏராளமான நிர்வாகிகள் குவிந்திருந்திருக்கிறார்கள்.