திருச்சி
பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருச்சியில் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வரும் 22, ஆம் தேதி அன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். விழாவுக்கு முதல் நாளான 21 ஆம் தேதி பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்னதாக 108 வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதரைத் தரிசித்துவிட்டு அயோத்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி ஸ்ரீரங்கத்துக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.
திருச்சி விமான நிலையம் மற்றும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல்துறை உயர் அதிகாரிகள் பிரதமர் விமான நிலையத்தில் இருந்து கோவிலுக்கு வரும் வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
பிரதமர் மோடி வருகையையொட்டி திருச்சியில் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். தமது உத்தரவை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.