சென்னை

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இந்த நூற்றாண்டு கடந்த நிலையத்தை, பல்வேறு நவீனவாதிகளுடன் உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.  எனவே, அடுத்த 50 ஆண்டுகளில் ரயில்கள் இயக்கம், பயணிகள் வருகை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, மறுசீரமைப்பு பணிகளை ரூ.734.91 கோடியில் மேற்கொள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்குக் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் எழும்பூர் நிலைய மறுசீரமைப்பு பணியை அந்த நிறுவனம் தொடங்கியது./  இதில் முதல்கட்டமாக, எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஊழியர்கள், அதிகாரிகள் குடியிருப்புகள் ஆகியவற்றை இடித்தும், மரங்களை அகற்றும் பணியும் முடிந்த பிறகு, அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியது.

இங்கு முழுவீச்சில் ரயில் நிலைய கட்டிடங்கள், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், 72 மீட்டர் புறப்பாடு மையம், 36 மீட்டர் பாதை வழியாக பயணிகள் அமருமிடம், நடைமேம்பாலம், பார்சல்களை கையாளுவதற்கான நடைமேம்பாலம், புதிய மின் துணை நிலையம், புதிய ரயில்வே குடியிருப்புகள் கட்டுதல், மறுவடிவமைப்பு உள்ளிட்ட துணை திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

எனவே காந்தி இர்வின் சாலையை ஒட்டி,எழும்பூர் ரயில் நிலைய பார்சல் அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும், பூந்தமல்லி சாலையை ஒட்டிய ரயில் நிலைய பகுதியில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையமும் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளது.  இங்கு புதிய கட்டிடம் கட்டிய பிறகு,பழைய கட்டிடத்தில் இருந்து பொருட்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், எழும்பூர் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயில் பகுதி இடிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,