சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது, தந்தையின் பெயரான ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என கூறி பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து அவரது டிவிட்டர் சமுக வலைதளப்பக்கதின் சுயவிவரங்களும்  மாற்றப்பட்டது.

அதில், தமிழக முதல்வர், திமுக தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், Belongs to Dravidan Stock (திராவிடத்தை சேர்ந்தவன்) என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுவரை தமிழகத்தில் பதவி ஏற்றுள்ள அதிமுக உள்பட  பல கட்சிகள், கடவுளின் மீது நம்பிக்கை வைத்து பதவி ஏற்பது வழக்கமான நிகழ்வாகும். ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே தனது மறைந்த தந்தையின் நினைவாகவும், அவரை கவுரவப்படுத்தும் வகையிலும், திராவிட பாரம்பரியத்தை முன்னெடுக்கும் வகையில், கடவுள் மீது என்ற வார்த்தைக்கு பதில்,  ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என கூறி பதவி ஏற்றார். அப்போது பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.,

ஸ்டாலினுக்கு  ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, 33 அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவிஏற்றனர். அவர்களுக்கும் கவர்னர்  பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முன்னதாக பதவி ஏற்பு விழாவுக்கு வந்த கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஸ்டாலின், அவர்களிடம் அமைச்சரவை சகாக்களை அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.தொடர்ந்து பதவி ஏற்பு விழா தொடங்கியது.