thamilga
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது.
அ.தி.மு.க., தி.மு.க., தே.மு. தி.க.- மக்கள் நலக்கூட்டணி, பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். நேற்றைய நிலவரப்படி, 234 தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 82 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 3 ஆயிரத்து 612 பேர் ஆண்கள். 468 பேர் பெண்கள். 2 பேர் திருநங்கைகள்.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 6-வது நாளாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. – மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க. கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் இன்று பெரும்பாலும் சுயேட்சை வேட்பாளர்களே மனுக்கள் கொடுத்தனர்.
அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாற்று வேட்பாளர்கள் பலரும் இன்று வேட்புமனு கொடுத்தனர். ஏற்கனவே மனு கொடுத்திருந்தவர்கள் இறுதி நாளான இன்று தேவையான ஆவணங்களை கொண்டு வந்து கொடுத்தனர். இதனால் தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களில் கடும் கூட்டம் காணப்பட்டது.
மைலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜன் உள்பட சில முக்கிய பிரமுகர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மே 2-ந்தேதி கடைசி நாளாகும்.
அன்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கான மாற்று வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்பப் பெறுவார்கள். அந்தவகையில் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனுக்கள் வாபஸ் பெறுவது முடிந்ததும் அன்று மாலையே 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழக சட்டசபை தேர்தல்கள வரலாற்றில் 1971 ஆண்டு தேர்தலில் மொத்தமே 748 பேர்தான் போட்டியிட்டனர். அவர்களில் பெண் வேட்பாளர்கள் 15 பேர்தான்.
1977-ல் 1390 பேர், 1980-ல் 1029 பேர், 1984-ல் 1499 பேர், 1989-ல் 3046 பேர், 1991-ல் 2834 பேர், 1996-ல் 5017 பேர், 2001-ல் 1860 பேர் போட்டியிட்டனர். 2006-ம் ஆண்டு 2584 பேரும் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் 2748 பேரும் போட்டியிட்டனர்.
இந்த ஆண்டு வேட்பாளர்கள் எண்ணிக்கை சற்று உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கையும் உயரக்கூடும் என்று தெரிகிறது. வேட்பாளர் இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு பிரச்சாரம் செய்ய இரு வாரங்கள் அவகாசம் உள்ளது. 14-ந்தேதி மாலை பிரசாரம் நிறைவு பெறும்.
16-ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். 19-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படும். அன்று மதியமே தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? என்பது தெரிந்து விடும். இதையடுத்து மே 21-ந் தேதியுடன் தேர்தல் நடவடிக்கைகள் நிறைவு பெறும்.