ண்ணூர்

ண்ணூர் விமான நிலையத்தில் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை உருக்கி கால்சட்டையில் ஒட்ட வைத்துக் கடத்தி வந்த கேரள வாலிபர் பிடிபட்டுள்ளார்.

அகில இந்திய அளவில் கேரள மாநிலத்தில் தங்கக் கடத்தல் அதிக அளவில் நடைபெறுகின்றன.  இங்கு திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.  இவற்றின் வழியாகத் துபாய், சார்ஜா, பக்ரைன் போன்ற அரபு நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதால் இங்கு அதிக அளவில் சோதனை நடைபெறுகிறது.

கடந்த வருடம் திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம்  நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு தங்கம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத் துறை மற்றும் வருவாய், புலனாய்வுத் துறை தீவிர நடவடிக்கை எடுத்தாலும், மோசடி கும்பல் பல்வேறு நூதன முறைகளைக் கையாண்டு கடத்தலைத் தொடரத்தான் செய்கின்றன. இந்நிலையில் நேற்று கண்ணூர் விமான நிலையத்தில் ஒரு நூதன தங்க கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேற்று இரவு துபாயில் இருந்து கண்ணூருக்கு வந்த விமான பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  ஒரு வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டு தீவிர சோதனை நடத்திய போதும் ஒன்றும் சிக்கவில்லை.  சந்தேகம் குறையாத அதிகாரிகள் தனி அறைக்கு அவரை அழைத்து சென்று எக்ஸ்ரே பரிசோதனை செய்த போது அவர் போட்டிருந்த கால்சட்டையில் பசை வடிவில் தங்கம் இருந்து தெரியவந்தது.

அந்த கால்சட்டையை அவிழ்த்துப் பரிசோதித்த போது கால்சட்டையில் உருகிய தங்கத்தை ஒட்ட வைத்து அதன் மேல் வேறொரு துணியைத் தைத்துத் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அவரிடம் இருந்து மொத்தம் 302 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.  தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் ஆகும்.  அந்த  வாலிபர் கண்ணூரைச் சேர்ந்த சிகாப் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.