சென்னை:
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி மற்றும் அதிமுக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் கலந்து கொள்ள இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த தமிழக சட்டபேரவை தேர்தலில் 134 இடங்களை வென்ற அ.தி.மு.க. இன்று பதவி ஏற்கிறது. முதல்வராக ஜெயலலிதாவும் மற்றும் அமைச்சர்களும் இன்று  பிற்பகல் 12 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவி ஏற்கிறார்கள்.
இந்த விழாவில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், திரையுலகினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிடம் ஸ்டாலின் சுனாமி நிதி அளித்தபோது ( கோப்பு படம்)
ஜெயலலிதாவிடம் ஸ்டாலின் சுனாமி நிதி அளித்தபோது ( கோப்பு படம்)

தமிழக சட்டசபையின் முதல் வலிமையான பிரதான எதிர்க்கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ள திமுகவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.  இதை திமுக ஏற்று தனது பிரதிநிதிகளை அனுப்ப இருக்கிறது.  அதன்படி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இந் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.  அவருடன் அவரது கட்சி சார்பில் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 88 எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
ஜெயலலிதா பதவியேற்பில் ஸ்டாலின் கலந்து கொள்வது புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2002ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது அவரும், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அன்பழகனும் கலந்து கொண்டனர்.