தினகரனை பொருத்தவரை கதாநாயகனாக தன்னை சித்தரிப்பதற்கு கோடி கோடியாக செலவு செய்து முயற்சித்தும் ஜீரோ ஆகிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பதவி என்பது எங்களுக்கு இரண்டாம் பட்சம். மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும். மத்திய மந்திரி பதவிக்கு அ.தி.மு.க.வில் 2 பேர் இடையே போட்டி என்ற அனுமான கேள்விக்கு பதில் அளிக்க இயலாது. தி.மு.க. தலைவர் ஸ்டாலினை பொருத்தவரை சந்தர்ப்பவாதி என்பது தெளிவாகிறது. இன்று ஜெகன்மோகன் ரெட்டியை சந்திப்பது ஆதாயத்திற்கு. குளம் தேடி பறந்து வல்லமை படைக்கும் கொக்கு என்பது தி.மு.க.விற்கு பொருந்தும்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த ஸ்டாலின் பதிலுக்கு, நானும் சொல்கிறேன், ‘பொறுத்து இருந்து பாருங்கள்’. அடுத்த இரண்டு ஆண்டுகளில் எங்களுடைய காட்சியை அவர்கள் பார்ப்பார்கள். நிச்சயமாக நதி நீர் இணைப்பு திட்டம் சாத்தியமாகும். கமலை பொருத்த வரை, பதவி கொடுத்தால் நான் செயல்படுவேன். இல்லை என்றால் எக்ஸ்ட்ரா கரிகுலர் செயல்பாடுகளில் ஈடுபடுவேன் என்பதுதான். இது தான் அவர் அரசியல். தமிழகத்திற்கு வருத்தம் தரக் கூடியதாக இருக்கிறது.

தினகரனை பொருத்தவரை, கதாநாயகனாக தன்னை சித்தரிப்பதற்கு, கோடி கோடியாக செலவு செய்து முயற்சித்தார், ஆனால் அந்த ஹீரோ, ஜீரோ ஆகிவிட்டார். பூஜ்ஜியம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். காவிரி நீர் வழங்குவது நீதிமன்ற உத்தரவு. அதை முறைப்படி கர்நாடக அரசு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.