mubooba-mufti_650x400_61454381866
ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத் மரணத்திற்குப்பின்  அவருடைய மகள் மெகபூபா முப்தி முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பிடிபி மற்றும் பாஜக கட்சி எம்.எல்.ஏக்களிடையே ஒருமித்த கருத்து உருவாகாததால் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் குழப்பம் நிலவி வந்தது.
இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் மெகபூபா முப்தி பிரதமர் மோடியை சந்தித்து புதிய அரசு அமைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் பிடிபி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே உடன்பாடு எட்டியது. இதனையடுத்து அங்கு மீண்டும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீர் மாநில முதல் பெண் முதல் அமைச்சராக மெகபூபா முப்தி பதவியேற்க உள்ளார். இவர் இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் முதல் அமைச்சர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
மெகபூபா முப்தி கடந்த சனிக்கிழமை அன்று மாநில ஆளுநர் என்.என்.வோராவை சந்தித்தார். அப்போது 87 உறுப்பினர்களைக் கொண்ட  ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு   பிடிபியின் 27 எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவின் 25 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதுபோல சட்டப்பேரவையின் பாஜக தலைவர் நிர்மல் சிங்கும் ஆளுநரை சந்தித்து, மெக பூபா முப்தி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு தங்கள் கட்சி ஆதரவு அளிக்கும் கடிதத்தை வழங்கினார்.  பிடிபி சட்டமன்றத்தின் கட்சித் தலைவராக மெஹபூபா முப்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக 56 வயது மெகபூபா முப்தி  ஏப்ரல் 4 ஆம் தேதி பதவியேற்பது உறுதியாகி உள்ளது. மாநில குளிர்கால தலைநகரான ஜம்மு நகரில் பாஜகவின்  25 எம்.எல்.ஏ.க்கள் கூடித் தங்கள் தலைவராக நிர்மல் சிங்கை  தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவர்  கூட்டணி அரசில் துணைமுதல்வராக பதவியேற்க உள்ளார். தனது அரசாங்கம் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மாநில வளர்ச்சி  ஆகியவற்றில் தீவிரக் கவனம் செலுத்தும்.மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக இடையே அமைச்சர்கள்  இலாகா ஒதுக்கீடு தொடர்பாக எவ்விதப்பிரச்சினைகளும் கருத்து வேறுபாடுகளும் இல்லை. இது  ஒரு கூட்டணி அரசாங்கம். நாங்கள் ஒன்றும் தனித்தனி கட்சியாக செயல்படவில்லை எனவே, எங்கள் இலாகா ஒதுக்கீட்டில் என்ன  வேறுபாடுகள் இருக்கும் என்று மெகபூபா முப்தி  தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி  3 நாள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை மார்ச் 29 அன்று தொடங்குகிறார். அவர் மீண்டும் ஏப்ரல் 3 இல் தாயகம் திரும்புகிறார்.  ஆனால் அவருடைய கடுமையான பல்வேறு அலுவல்கள் காரணமாக மெகபூபா முப்தியின்  பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொள்ளப்போவதில்லை என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முப்தி முகமது சயித்தை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு பிடிபியும் பாஜகவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூட்டணி அரசு அமைத்தது. இரண்டு கட்சிகளும் இணைந்து தங்களுக்குள் பல்வேறு கூட்டணி ஒப்பந்தங்களை அமைத்துக்கொண்டு அரசாங்கத்தை வழிநடத்தின. முஃப்தி முகமது சயீத்தின் திடீர் மறைவுக்குப்பின் ஜனவரி 8 ஆம் தேதி முதல் அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு இன்றுவரை தொடர்கிறது. இந்நிலையில் பிடிபி கட்சியின் தலைவராக மெகபூபா முப்தி பொறுப்பேற்று ஆட்சி அமைக்கும் பணியில் களம் இறங்கினார்.