புதுடெல்லி:

நேஷனல் ஹெரால்டு பங்கு விற்பனையில் வரி ஏய்ப்பு ஏதும் இல்லை என்ற மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் சுற்றறிக்கை காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


ஜவஹர்லால் நேரு பிரதமரானதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் கடன் 90 கோடியை எட்டியது. இந்த நிறுவனத்தை மீட்கும் பொருட்டு, கட்சி சார்பாக அந்த கடனை அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. இதனையடுத்து, பங்கு விற்பனையில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக வருமான வரித்துறை சார்பில், பங்குதாரர்களான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், புதிதாக பங்குகளை மாற்றும் போது வரி கட்ட வேண்டிய அவசியமில்லை. இதில் வரி ஏய்ப்பு ஏதும் நடைபெறவில்லை என்று சுட்டிக்காட்டியது. யங் இண்டியன் அறக்கட்டளை லாப நோக்கில் நடத்தப்படுவது இல்லை என்பதால், இதற்கு வரி விதிப்பு பொருந்தாது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கையை காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபை உறுப்பினர் விவேக் தாங்கா வரவேற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நிலையும் இதுவாகத்தான் இருந்தது என்று கூறிய அவர், துன்புறுத்தும் நோக்கிலேயே இந்த வழக்கை போட்டுள்ளனர் என்றார். காங்கிரஸ் கட்சியினர் வரி ஏய்ப்பு ஏதும் செய்யவில்லை என்பதையே இந்த சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.