"சமூக வலைதள வெட்டி வீரர்களே, நேரடியாக போர்முனைக்குச் செல்லுங்கள்..!"

மும்பை: சமூக வலைதளங்களில் அமர்ந்துகொண்டு போர் மற்றும் சாகசம் பற்றிய வீர வசனங்களை உதிர்ப்பவர்கள், நேரடியாக போர்முனைக்குச் சென்று போரிட்டு அனுபவம் பெறட்டும் என்று சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானப்படை அதிகாரி நினாத் மான்டாவ்னே மனைவி விஜேதா தெரிவித்துள்ளார்.

தன் கணவரை பறிகொடுத்த வேதனையில் இருக்கும் அவர், சமூக வலைதளங்களில் பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு, போரின் தேவை மற்றும் வீர சாகசங்கள் குறித்து வசனம் பேசுபவர்களை கடுமையாக சாடியுள்ளார். “சமூக வலைதளங்களின் இன்றைய போக்கு மிகவும் கொடுமையானதாகவும் பயங்கரமானதாகவும் மாறிவருகிறது. இதன்மூலம் நமக்கு கிடைக்கப்போகும் நன்மை என்று எதுவுமில்லை. நான் அந்த சமூக வலைதள சூரப்புலிகளுக்கு சொல்வது என்னவென்றால், உங்களுக்கு உண்மையிலேயே போரின் மீது காதல் இருந்தால், தயவுசெய்து, நீங்கள் தற்போது செய்துகொண்டிருக்கும் வெட்டி வேலையை விட்டுவிட்டு, ‍எல்லைக்குச் சென்று போரிடுங்கள். அதன்மூலம், போரின் உண்மையான அனுபவத்தைப் பெறுங்கள் என்பதுதான்” என்றார்.

வீரமரணமடைந்த விமானப்படை அதிகாரியின் உடல், மராட்டிய மாநிலத்தில், அவரின் சொந்த ஊருக்கு எடுத்துவரப்பட்டு எரியூட்டப்பட்டது.

அதிகாரியின் கதைச் சுருக்கம்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான அவர், வணிக விமானியாவதற்கான வாய்ப்பு கிடைத்தும், ராணுவப் பணியின் மீதான தனது மோகத்தால், அதை மறுத்தவர். நாசிக்கில் உள்ள போன்ஸ்லா ராணுவப் பள்ளி மற்றும் அவுரங்காபாத்திலுள்ள ஆயத்த சேவைகள் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் முன்னாள் மாணவர். 33 வயதான இவருக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கல்வி காலத்தில், சிறந்த மாணவர் என்று பாராட்டப்பட்டவர்! கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் இவர் காஷ்மீருக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

– மதுரை மாயாண்டி