Sad-Teacher

சிரியராக இருந்து குடியரசு தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாக செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.   நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது.

ஆனால் தமிழக ஆசிரியர்கள், “இந்த கொண்டாட்டமோ, விருதோ தேவையில்லை.. எங்களை வாழவிட்டால் போதும்” என்கிறார்கள் விரக்தியாக.

ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த சிலர் நம்மிடம் பேசியதில் இருந்து…

“ஆசிரியர்களுக்கிடையே சம்பள வேறுபாட்டை – குளறுபடியை – ஏற்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.  தலைமை ஆசிரியர்களைவிட, அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம்! இந்த மாதிரி உலகிலேயே வேறு எங்கும் கிடையாது.

நொந்துபோன தலைமை ஆசிரியர்கள், “ எங்களை பழையபடி ஆசிரியர்களா ஆக்கிடுங்க” என்று கோருகிறார்கள்.  பதவி இறக்கம் வேண்டும் என்று கோரிக்கை வைப்பது இங்குதான் நடக்கிறது!

teach

 சமீபத்திய போராட்டம்

 

ஆசிரியர் தகுதித் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும். ஆனால் இரண்டு ஆண்டுகளாக இந்தத் தேர்வை நடத்தவே இல்லை. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அரசு பள்ளி ஆசிரியராக சேர முடியும். தவிர அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தத் தேர்வு எழுதாமலேயே பணிக்கு சேரலாம். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த தகுதித் தேர்வை எழுதி பாஸ் ஆக வேண்டும்.  அப்படி அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தகுதித் தேர்வு எழுதாமல்) பணி புரிபவர்கள் இப்போது திண்டாடி நிற்கிறார்கள்.

கடந்த வருடம், ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களிடம் “வாங்கிக்கொண்டு” அவரவர் விரும்பிய இடத்தில் பணி அமர்த்தினார்கள். இப்போது பணி நிரவல் என்கிற பெயரில் எல்லோரையும் வேறு வேறு ஊருக்கு தூக்கி அடிக்கப்போகிறார்கள். ஆக, லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சொந்த ஊரில் பணி வாங்கியவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி தருகிறது அரசு. நல்ல விசயம்தான். ஆனால் கணினி ஆசிரியர்களை நியமிப்பதே இல்லை.  அவர்கள் நொந்து நூலாகி,  சில நாட்களுக்கு முன்பு கூட உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

ஆசிரயர் படிப்பு படித்து வேலையின்றி இருப்பவர்கள் ஒருபுறம்..  பள்ளிகளில் பணியிடங்களை நிரப்பாத போக்கு இன்னொருபுறம்.

இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கிறது. ஆசிரயர் படிப்பு படித்தவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது.

வேறு வழியின்றி தனியார் பள்ளியில் வேலைக்கு செல்பவர்கள் நிலையை வெளியில் சொன்னால் வெட்கட்கேடு. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கொத்தடிமைகளாகவே ஆசிரியர்களை நடத்துகிறார்கள்.

இந்த நிலையில், ஆசிரியர் தினத்தை அரசு கொண்டாடுகிறது. ஆனால் எங்கள் சோகத்தை கண்டுகொள்வதில்லை” என்று சோகத்துடன் சொல்லும் ஆசிரியர்கள்,  “நாங்கள் எங்கே போய் முட்டிக்கொள்வது?” என்று நொந்துபோய் கேட்கிறார்கள்.

மாணவர்களின் எல்லா கேள்விகளக்கும் விடை சொல்லும் ஆசிரியர்களின் இந்த கேள்விக்கு என்ன பதில்  சொல்வதென்று தெரியவில்லை.