stalin

திருப்பூர் : சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், ஜெயலலிதா ஒருமணி நேர முதல்வராக இருப்பதாகவும்  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

“சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தின் தற்போதைய நிலையை மாற்றியே ஆக வேண்டும். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தமிழக காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காவல்துறையில் அரசியல் தலையீடு அறவே ஒழிக்கப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையில் அரசியல் தலையீடு இருக்காது.

அதிமுக ஆட்சியில் கண்மாய், கால்வாய்கள் தூர் வாரப்படாமல் கிடக்கின்றன. அணைகளை தூர்வார பசுமை தீர்ப்பாயத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மதுவிலக்கு தொடர்பாக திமுக மீது அதிமுக அரசு வீண்பழி போடுகின்றது. காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு ஒரு இரங்கல் கூட முதல்வர் ஜெயலலிதா தெரிவிக்கவில்லை. கருணாநிதி கொண்டு வந்த மதுவிலக்கை ரத்து செய்தது அதிமுக ஆட்சிதான்.

மாணவர்கள், பெண்கள் மது அருந்துவது டிவியில் ஔிபரபபு செய்யப்பட்டது. இதனையடுத்து திமுக ஆட்சியில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கலைஞர் அறிவித்தார்.

சசிபெருமாள் மரணத்தை போலீசார் வேடிக்கை பார்த்தனர். இதனால் நீதிவிசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறோம். தி.மு.க.,வின் மதுவிலக்கு போராட்டத்தை தடை செய்ய அதிமுக அரசு முயற்சி செய்கிறது.

இளைஞர்கள் வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் அவல நிலை நிலவுகிறது. தி.மு.க., ஆட்சியில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பணி நியமன சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்தது. பல ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கின்ளறனர். அ.தி.மு.க., ஆட்சியில் புதிய வேலை வாய்ப்பு ஏதும் இல்லை.

புதிய தொழில்கள் உருவாக்கம் இல்லை. புதிய முதலீடுகள் இல்லை. ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. உலக முதலீட்டாளர் மாநாட்டிற்காக தொழிலதிபர்கள் மிரட்டப்படுகின்றனர். முதல்வரை புகழ வேண்டும் எனவும் தொழிலதிபர்களிடம் கூறப்பட்டுள்ளது.

மின் பிரச்சினை தமிழகத்தில் சரிசெய்யப்படவில்லை. முதலீட்டாளர்களை கவர முழுநேர முதல்வர் தேவை. உடனுக்குடன் முடிவெடுக்க பப்ளிக் சர்வன்ட் தேவை. ஆனால் ஜெயலலிதாவோ ஒரு மணி நேர முதல்வராக உள்ளார்.

– இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.