12238070_918266921544310_4925331359271254241_o

ந்த தீபாவளிக்கு வெளியான அஜீத்தின் வேதாளம் திரைப்படத்தை பார்த்து ரசித்தவர்களை விட, அதன் வசூலை கேட்டு அதிர்ந்தவர்களே அதிகம் இருப்பார்கள்!

“முதல் நாள் 15.3 கோடி வசூல் செய்து சாதனை! முதல் 6 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ,60 கோடி வசூல்!

8 நாட்களில் ரூ 100 கோடி வசூல்!” என்றெல்லாம் செய்திகள் வெளியாகி புருவத்தை உயர்த்தவைக்கின்றன. படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினமோ, “எனக்கே இன்னும் வசூல் ரிப்போர்ட் வரலையே” என்று ஒதுங்குகிறார்.

சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்காத நிலையில், விவரம் அறிந்தவர்களிடம் இது குறித்து பேச விரும்பினோம்.

உடனே நம் நினைவுக்கு வந்தவர் கலைப்புலி ஜி. சேகர்தான். நீண்டகாலமாக தயாரிப்புத் துறையில் இருக்கும் இவர், டிஜிட்டல் தமிழ்த்திரைப்பட சங்க தலைவராகவும் பதவி வகிக்கிறார். தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினரும்கூட.

சினிமாவின் இன் அண்ட் அவுட் அனைத்தும் அறிந்தவர்.

அவரிடம், வேதாளம் வசூல் குறித்து கேட்டோம்.

ஆதங்கச் சிரிப்பை உதிர்த்தவர் படபடவென பேச ஆரம்பித்தார்: “இப்படி வசூல் கணக்கு சொல்வது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. சூப்பர் ஹிட் என்று விளம்பரப்படுத்தப்படுகிற வேதாளம், டிஸ்ட்ரிபூட்டருக்கு உன்னைப்பிடி என்னைப்பிடி என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறது” என்றார் அதிரடியாக.

மேலும் அவர், “சூப்பர் ஹிட் என்றால் ஒன்றுக்கு பத்து கிடைக்கணும். அதாவது பத்து லட்சம் போட்டா ஒருகோடி. ஒரு கோடி போட்டா பத்துகோடி. அப்படித்தான் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் ஓடின.

சின்ன பட்ஜெட் படங்கள் கூட அப்படி ஓடியிருக்கின்றன. வைகாசி பெறந்தாச்சு, கரகாட்டகாரன் எல்லாம் உதாரணம்.

ஆனா வேதாளம் படத்தை பத்துகோடிக்கு வாங்கினவங்களுக்கு ஒரு கோடி கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்!” என்றார்.

“முதல் நாளே தமிழகத்தில் பதினைந்துகோடி ரூபாய் வசூலானது என்று செய்திகள் வந்தனவே” என்றோம்.

“அது ஏமாத்து வேலை. முப்பது ரூபா டிக்கெட்டை முன்னூறு ரூபாய்க்கு கள்ளத்தனமாக விற்றதால் பதினைந்து கோடி கிடைத்தது. இது மறுநாளே பாதியாக குறைந்துவிட்டது. அதற்கும் மறுநாள் அதிலும் பாதிதான் வசூல்!

தன்னை உயிராக நினைக்கும் ரசிகனை இப்படி ஏமாற்றித்தான் வசூல் கணக்கைக் காட்டுகிறார்கள் ஹீரோக்கள். இவர்களில் சிலர்தான், தன்னை வருங்கால முதல்வர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் இன்னும் கொடுமை!”

“இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும்?”

”தியேட்டரில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும். அரசு நிர்ணயித்த தொகைதான் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். தவிர படத்தின் செலவு அதிகரிப்பதற்குக் காரணம் இந்த முதல் நாள் மோசடி வசூல்தான். இதில் பெரும்பங்கு அந்த படத்தில் நடிக்கும் நடிகருக்குத்தான் போய்ச் சேருகிறது. இதை தடுக்க வேண்டும். அதே போல, ஒரு நடிகரின் படமே எல்லா தியேட்டர்களிலும் திரையிடப்படுவதை தடுக்க வேண்டும். மாஸ் நடிகர்கள் என்று சொல்லிக்கொண்டு, இவர்களது படமே தியேட்டர்கள் அனைத்தையும் ஆக்கிரமிக்கின்றன. இது தவறு. உதாரணமாக, கோயம்பேடிலிருந்து தினம் ஆயிரம் பேருந்துகள் புறப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம். பணக்காரர் ஒருவர், தன் மகள் திருமணத்துக்காக அத்தனை பேருந்துகளையும் தனது கட்டுப்பாட்டில் கொடுக்கச் சொன்னால் அரசு ஒத்துக்கொள்ளுமா.. அது போலத்தான் அத்தனை தியேட்டர்களையும் குறிப்பிட்ட எவருக்கும் ஒதுக்ககக்கூடாது என்பது.

இதற்கெல்லாம் அச்சாரமாக, மூன்று மாதங்கள் படங்கள் எதையும் வெளியிடக்கூடாது. படப்பிடிப்பு உட்பட எந்த சினிமா பணியும் நடக்கக்கூடாது. அப்போதுதான் எல்லா நடிகரும் ஒரே நிலைக்கு வருவார்கள்!”

“படத்தின் பெரும் செலவு, நடிகரின் சம்பளமாக இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. இதற்கு என்ன தீர்வு”

“படத்தின் வசூலில் இருபது பிரசண்ட் ஹீரோவுக்கு சம்பளமாக தரலாம். வேதாளம் எழுபது கோடி வசூலாகும் என்றால், பதினான்கு கோடி அஜீத்துக்கு தரலாம். ஆனால் முப்பது கோடி, ஐம்பது கோடி என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இது சினிமாவுக்கு நல்லது அல்ல!”

“ஆனால் நூறு கோடிக்கும் மேல் வசூலானதாக வேதாளம் பற்றி செய்தி வருகின்றனவே”

“பத்திரிகைகளில்தான் அப்படிப் போடுகிறீர்கள். சம்பந்தப்பட்டவர்கள் ஏதும் சொல்ல வில்லையே.

ரஜினியின் லிங்காவுக்கும் இப்படித்தான் செய்திகள் வந்தன. கடைசியில் விநியோகஸ்தர்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ள வேண்டிய நிலைமை. இதனால் ரஜினியே பணத்தைத் திருப்பிக்கொடுத்தாரே..”

“இதுபோன்று..”

“கொஞ்சம் இருங்கள். இப்படி பணத்தை திருப்பிக்கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆரம்பத்திலேயே தனக்கான நியாயமான சம்பளத்தை அவர் வாங்க வேண்டும். முறைகேடான சம்பளம் வாங்கிவிட்டு, பிறகு திருப்பிக்கொடுப்பது என்பது தேவையில்லாத வேலை. ரஜினிதான் இந்த தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். அது காலைச் சுற்றிய பாம்பாகிவிட்டது!”

சந்திப்பு: டி.வி.எஸ். சோமு