சென்னை,:
‘தமிழக வாக்காளர்கள், ஒரு முறை, அன்புமணிக்கு முதல்வர் வாய்ப்பு அளித்தால் , இந்தியாவே பாராட்டும் நிலை வரும்’ என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
வண்டலுாரில் நடந்த பா.ம.க., மாநாட்டில் அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
“மாற்றம், முன்னேற்றம் என்ற இரண்டு வார்த்தைகளுக்கு, பெரும் சக்தி இருக்கிறது. முன்னேற்றத்தை நான் தருகிறேன் என்று சூளுரைத்த அன்புமணிக்கு, மக்கள் நிச்சயமாக ஆதரவு தருவார்கள்.
தமிழ்நாட்டுக்கு பலவித சிறப்புகள் இருக்கின்றன. இந்தியாவிற்கு நல்ல தலைவர்களை கொடுத்தது தமிழகம்தான்.. ஆனால், இன்று, 100 கோடி ரூபாய் அபராதம், நான்கு ஆண்டு சிறை; சர்க்காரியா ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் செய்தவர்கள்தான் தலைவர்களாக இருக்கிறார்கள்.
இந்த அவல நிலையை மாற்றி காட்டவே, தமிழக மக்களிடம் அன்புமணி ஆதரவு கேட்கிறார். இருபது முதல் முப்பது சதவிகித வாக்காளர்கள் – அதிலும் படித்தவர்கள் வாக்களிக்க வருவதே இல்லை.
காரணம் கேட்டால், அரசியல் ஒரு சாக்கடை என்பார்கள். அப்படி என்றால் அதை சுத்தம் செய்வது யார்?
வாக்களிக்காத வாக்காளர்கள், அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வர வேண்டும் என்று அழைக்கிறோம். நாம் எல்லாம் சேர்ந்து அந்த சாக்கடையை சுத்தப்படுத்துவோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம். முன்னேற்றத்திற்கு வழி காண்போம்.
அன்புமணி முதல்வரானால், சட்டசபையில் பேச எதிர்க்கட்சிகளுக்கு, 70 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும். சட்டசபையில் அன்புமணி புகழ் பாடப்படாது. ஒரு சட்ட மசோதா என்றால், அன்புமணி எதிர்க்கட்சி தலைவர் வீட்டிற்கு சென்று ஆலோசித்து, சட்டசபையில் அறிவிப்பார். அப்படிப்பட்ட ஆரோக்கியமான அரசியல் வரும்.
தமிழக அரசுக்கு, 2.47 லட்சம் கடன் இருக்கிறது. இதை குறைக்க என்ன வழி என்று, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். அவர், 10 வழிமுறைகளை கூறினார். மின்சார வாரியத்தை சீரமைக்க, 13 வழிமுறைகளை தெரிவித்தார். அன்புமணி கூறுவது வளர்ச்சி, முன்னேற்றம். அதை நிறைவேற்ற அதிகாரிகளிடம், ஆலோசனை கேட்கிறோம்.
தமிழகத்தில் 5.79 கோடி வாக்காளர்கள், ஒரு முறை அன்புமணிக்கு ஓட்டு போடுங்கள். அவரது செயல்பாட்டை பார்த்து, இந்தியாவே பாராட்டி, இந்தியாவிற்கு வழிகாட்டுங்கள் என்று கோரிக்கை வைக்கும் நிலை வரும். தமிழகத்தில் இருந்து, மீண்டும் ஒரு நல்ல தலைவர் இந்தியாவுக்கு கிடைப்பார்!” – இவ்வாறு ராமதாஸ் பேசினார்.