333
தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழியின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கும்படி உளவுத் துறைக்கு, மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழி நெடுங்காலமாகவே அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். படைப்பாளியான அவர், தனது கவிதைகள் மூலமே பேசப்பட்டார்.  கவிதைகள் எழுதவது இலக்கிய கூட்டங்களி்ல் பேசுவது என்ற அளவிலேயே அவரது செயல்பாடு இருந்தது.
கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், ‘சென்னை சங்கமம்’  என்ற நிகழ்ச்சியை நடத்தினார். கிராமிய கலைகளை, சென்னை மக்கள் ரசிக்க ஏதுவாக சென்னையில் பல இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார். இதன் மூலம்  கனிமொழியும் தமிழகம் முழுதும்  பரபரப்பாக பேசப்பட்டார்.
இந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. சிறைத்தண்டனையும் அனுபவித்தார்.  ஜாமீனில் வெளிவந்த அவர், சில காலம் அமைதியாக இருந்தார்.
பிறகு, மீண்டும் தீவிர அரசியலில் குதித்தார்.  ராஜ்ய சபா எம்.பி.யான அவர். கட்சியின் மகளிர் அணி செயலராக நியமிக்கப்பட்டார். மேலும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினராகவும் ஆனார்.
இந்த காலக ட்டத்தில் தீவிரமாக அரசியலில் இறங்கினார் கனிமொழி. அவருக்கு இருக்கும் இலக்கிய முகமும், படித்தவர் என்ற  முத்திரையும் கட்சிக்காரர்களிடம் தனி இமேஜை
உருவாக்கியது.  அவருக்குப் பின்னாலும் கட்சியினர் அணிவகுக்க ஆரம்பித்தனர். “கனிமொழி அணி” என்றும் உருவானது.
வரும் சட்டசபை தேர்தலில் கட்சியின் பிரச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து கூட்டணி பற்றியும் அவரது கருத்துக்களை மேலிடம் கேட்டது.
டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், துணைத் தலைவர் ராகுலையும் சந்தித்த கனிமொழி, இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க காரணமாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களையும் தி.மு.க. கூட்டணியில் இணைக்க கனிமொழி முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும்,  அ.தி.மு.க.விடம் இருந்து பலவித காரணங்களால்  விலகி நிற்கும் சாதிக் கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் தொடர்புகொண்டு தங்கள் பக்கம் இழுக்க கனிமொழி முயற்சித்து வருகிறார்.
மொத்தத்தில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலினுக்கு இணையாக  செயல்பட்டு வருகிறார் கனிமொழி என்றால் மிகையில்லை.
மேலும், மதுவிலக்கு குறித்தும், தற்போதைய அ.தி.மு.க. அரசு மீதான புகார்கள் குறித்தும் தான் செல்லுமிடங்களில் எல்லாம் வலிமையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் கனிமொழி. இதற்கு மக்களிடையே வரவேற்பு இருப்பதாக உளவுத்துறை, ஆட்சி மேலிடத்துக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்று (28.02.16 – ஞாயிறு)கூட,  தி.மு.க.வைச் சேர்ந்த சமூகவலைதள நண்பர்கள் சந்திப்பு, சென்னை பெரியார் திடலில் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு பேசுகிறார் கனிமொழி.
ஆளும்கட்சிக்கு எதிரான போராட்டங்களில் அவர் தொடர்ந்து கலந்துகொள்வதும், அவரது பேச்சுக்களை மக்கள் விரும்புவதும் ஆளும் தரப்பின் கவனத்துக்கு சென்றது.
கனிமொழியின் அதிரடி செயல்பாடுகளை அச்சத்தோடு நோக்கிய ஆளும் தரப்பு கனிமொழியின்  நடவடிக்கைகளை கூர்ந்து கவனக்கும்படி உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு ஐம்பது சதவீத  இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்ட முன்வடிவை கனிமொழி விமர்சித்தார்.  உடனே அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து  உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அறிக்கை வெளியிட்டார். இதிலிருந்தே கனிமொழியின் பேச்சுக்களை உளவுத்துறை நோட் போட்டு உடனுக்குடன் மேலிடத்துக்கு அளிக்கிறது என்பதை அறியலாம்” என்கிறார்கள்.