vegetables

சென்னை மற்றும் சுற்றுவட்டார மக்கள், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.   ஐந்தாவது நாளாக இன்றும் பல பகுதிகளில் தொடர்ந்து மின்தடை நீடிக்கிறது. அலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை. தண்ணீரும் வடியவில்லை.

பெரும்பாலான கடைகள் மூடியே இருக்கின்றன. இதனால் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  வியாபாரிகள் என்கிற போர்வையில் செயல்படும் சமூகவிரோதிகள் பலர் இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி மக்களை சுரண்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இருபது ரூபாய் விலை உள்ள  அரை லிட்டர் பால் பாக்கட்டை எண்பது ரூபாயில் இருந்து நூறு ரூபாய் வரை விலை ஏற்றி விற்கிறார்கள்.

வெள்ளத்தால் ஏ.டி.எம்.கள்   பழுதானதால்,  யாராலும் பணம் எடுக்க முடியவில்லை. ஆகவே பலரிடம் பணம் இல்லாத நிலை. சிறு குழந்தைகள் உள்ளவர்கள் இந்த நிலையில் பால் வாங்குவதற்கு பெரும் சிரமத்தை அடைந்தார்கள்.

அரசு பால் நிறுவனமான  ஆவின் உரிய விலையில் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் வியாபாரிகள் விலை அதிகமாக வைத்து விற்றார்கள். அதே நேரம் தனியார் பால் நிறுவனங்கள் பல, வியாபாரிகளுக்கே அதிகமான விலைக்கு அளித்தன.

“வருடம் முழுதும் இவர்கள் நிறுவன பாலை வாங்கி பயன்படுத்துகிறோம். அதற்காக வெள்ள நேரத்தில் இலவசமாக தர வேண்டும் என நினைக்கவில்லை. உரிய விலைக்காவது விற்கலாமே” என்று மக்கள் ஆதங்கப்பட்டார்கள்.

அதே போல வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒரு கிலோ, தலா நூறு ரூபாய் வரை விற்கிறார்கள். இதர காய்கறிகளும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

வழக்கம் போலவே ஆட்டோக்களும் மிக அதிக கட்டணம் வசூலிக்கின்றன. ஆட்டோக்காரர்களைப் பொறுத்தவரை, தங்களது அநியாய கட்டணத்தை ஆதிர்துது பெரும் பேச்சு பேசுவார்கள். உள்ளூர் முதல் உலக விவரங்கள் வரை (தப்புத்தப்பாக) எடுத்து விடுவார்கள்.

அப்படி பேசிய ஆட்டோகாரர் ஒருவரிடம், “ உலக விசயம் எல்லாம் பேசுகிறீர்களே… பிரான்ஸ் தலைநகர் பாரீஸில்  குண்டு வெடிப்புகள் நடந்தபோது அந்நகர டாக்ஸி ஓட்டுநர்கள் இலவசமாக ஓட்டினார்களே” என்றோம்.

அதற்கு அந்த ஓட்டுநர், “அது வல்லரசு நாடு சார்.. இங்க அப்படி இல்லையே” என்று வழக்கம் போல பொருத்தமான பதிலை கூறினார்.

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது போல பெரும்பாலான வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் செயல்படுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.