சென்னை

சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

நேற்று இரவு 9.30 ,மணி அளவில் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் 169 பயணிகள், ஊழியர்கள் உள்பட 175 பேர் பயணம் செய்யத் தயார் நிலையில் இருந்தனர். தலைமை விமானி விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு முன், இயந்திரங்களை விமானி சரி பார்த்தபோது விமான இயந்திரத்தில் பெருமளவு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் விமானம் வானில் பறந்தால் ஆபத்து ஏற்படும் என்பதை விமானி உணர்ந்தால் அந்த விமானத்தில் பயணிகள் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.   அந்த விமானம் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. விமான பொறியாளர்கள் வந்து, இயந்திர பழுதுகளைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 11.30 மணிக்கு மேலாகியும் பழுதுபார்ப்பு பணிகள் முடியவில்லை.

இதனால் விமான நிறுவன அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அந்த விமானம் ரத்து என அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் உள்ள இயந்திர பழுதுபார்ப்பு பணிகள் நிறைவு பெற்று, இன்று மாலை விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி 169 பயணிகளுக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

பிறகு அவர்களை வாகனங்களில் ஏற்றி வைத்து, தகவல் தெரிவித்ததும் வாருங்கள் என அனுப்பி வைத்தனர். நேற்றி விமானம் ரத்து செய்யப்பட்டதால், இன்று காலை துபாயில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா விமானமும் ரத்தாகி சென்னை வரவேண்டிய 170 பயணிகள் துபாயில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.