“இதுவரை பார்த்ததில் இதுவே சிறந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்காக தெரிகிறது” என்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் முன்னணி செஸ் வீரர் பிரான்சிஸ்கோ வலேஜோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஸ் சம்மேளனம் நடத்திய ஏலத்தை வென்ற இந்திய செஸ் சம்மேளனம், தமிழக அரசின் நிதியுதவியோடு சுமார் ரூ. 82 கோடி மதிப்பில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துகிறது.

187 நாடுகளில் இருந்து சுமார் 2000 வீரர்கள் கலந்துகொள்ள இருக்கும் இந்த விளையாட்டுப் போட்டிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய செஸ் சம்மேளனத்துடன் இணைந்து தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.

இதன் துவக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. பன்னாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியை துவக்கி வைத்து கௌரவிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி துவக்கி வைக்க இசைந்திருக்கும் இந்த நிகழ்ச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதால் இதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களும் கடந்த சில தினங்களாக சென்னைக்கு வர துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ஸ்பெயினில் இருந்து சென்னை வந்துள்ள உலகின் முன்னணி வீரரும் கிராண்ட் மாஸ்டருமான பிரான்சிஸ்கோ வலேஜோ “சென்னை வந்ததும் புகார் கூறும் வகையில் ஏதாவது குறைபாடு இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எல்லா ஏற்பாடுகளும் என்னை முற்றிலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு, விரைவான குடியுரிமை சோதனை, தவிர இதுவரை நான் அனுபவிக்காத விரைவான ஹோட்டல் செக்-இன் எல்லாமே மகிழ்ச்சி தருகிறது” என்று தனது டீவீட்டில் பதிவிட்டுள்ளார்.