barathi

மகாகவி என்று தமிழ் மக்களால் போற்றப்படும் சுப்பிரமணிய பாரதியார் 1882ம் வருடம் இதே நாளில்தான் பிறந்தார்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் சின்னசாமி இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர் சிறு வயதிலேயே தமிழில் மிக ஆர்வம் கொண்டிருந்தார்.

இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். பின்னாட்களில் இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

கவிஞராக மட்டுமின்றி எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என்று பன்முகம் கொண்டிருந்தார் பாரதி.

நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு என்று சமுதாயத்துக்குத் தேவையான பல்வேறு விசயங்களை தமது கவிதைகளில் வெளிப்படுத்தினார்.

பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையது ஆகும்.