பம்மல் சம்பந்த முதலியார் பிறந்தநாள் (1873 )
தமிழ் நாடகத் தந்தை என்ற புகழப்படும் பம்மல் சம்மந்த முதலியார், தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர் ஆவார். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர் இவர்.
சிறு வயதிலேயே ஆங்கில, தமிழ் நாடகங்களைப் பார்த்த இவருக்கு, தமிழ் நாடகங்களை தரம் உயர்த்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நண்பர்கள் சிலருடன் சென்னை ஜார்ஜ் டவுனில், 1891 ஜூலை 1 ஆம் நாள், “சுகுண விலாச சபை” என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.
நாடகம் என்றால் தெருக்கூத்து, சிற்றூர் மக்கள் மட்டுமே பார்வையாளர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களில் நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார். கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார்.
சேக்ஸ்பியரின் பல நாடகங்களை தமிழில் மொழி பெயர்த்தார். ஏராளமான நூல்களை எழுதினார். பத்மபூஷன் உட்பட பல விருதுகள் இவருக்கு அளிக்கப்பட்டன.
கண்பார்வை மங்கிய நிலையிலும் தாம் சொல்லியே பிறரை எழுத வைத்தார். 1967ம் ஆண்டு, தனது 81 வயதில் இறக்கும் வரை நாடகத்துறைக்கு பெரும்பணி ஆற்றினார்.
சாவி நினைவு நாள் (2001)
புகழ் பெற்ற எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் விளங்கிய சாவியின் இயற்பெயர் சா.விஸ்வநாதன். தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர் என்று பெயர் பெற்றவர்.
சிறுவயதிலேயே இதழியல் துறையில் நுழைந் இவர் கல்கி, ராஜாஜி, காமராசர், பெரியார் முதலான பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணி கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். .
ஆனந்த விகடன் இதழில் இவர் எழுதியவாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைத் தொடர் மிகவும் பிரபலமானது. மேலும் விசிறி வாழை, வேதவித்து உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். இவரது எழுத்துகள் அவரது மறைவுக்குப் பிறகு நாட்டுடமையாக்கப்பட்டது.
ஞானபாரதி என்ற அமைப்பை நண்பர்கள் சேர்ந்து தொடங்கி, கலைத்துறையிலும் இதழ்த் துறையிலும் முத்திரை பதித்தவர்களுக்கு விருதும் பொற்கிழியும் அளித்து கௌரவித்து வந்தார்.
பாபா ஆம்தே நினைவு நாள் (2008)
பாபா ஆம்தே என்று பரவலாக அறியப்பட்ட முரளிதர் தேவதாசு ஆம்தே பிரபலமான சமூகசேவகர் ஆவார். தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பு செலுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.
வழக்கறிஞரான இவர், இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் போராட்டத் தலைவர்களுக்காக வாதாடினார். காந்தியின் ஆசிரமத்தில் சிறிது காலம் தங்கி இருந்த இவர், தனது வாழ்நாள் முழுவதும் காந்தியவாதியாக வாழ்ந்தார். ஆனால் இறைமறுப்பாளராக இருந்தார்.
“நான் ஒரு தலைவராக இருப்பதை விட, சிறு சிக்கலைத் தீர்க்கக்கூடிய ஒரு பொறியாளனாக இருக்கவே விரும்புகிறேன்” என்றார்.
பத்மஸ்ரீ, பத்மபூசன் உட்பட பல விருதுகள் இவருக்கு அளிக்கப்பட்டன.
எஸ்.வி.ராமகிருஷ்ணன் நினைவு நாள் (2011)
எஸ். வி. ராமகிருஷ்ணன் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளராக விளங்கினார். 1936இல் கோவை மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார். சரித்திரமும் சட்டமும் பயின்ற இவர், சுங்கம் கலால் துறை ஆணையாளராக இந்தியாவின் பல பகுதிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இவரது எழுத்துக்கள் 1940 களின், தமிழக வாழ்க்கையைப் பதிவு செய்தன. இவரது முதலாவது நூல் அவரது 70 ஆவது வயதளவிலேயே வெளியானது குறிப்பிடத்தக்கது.