டில்லி

மத்திய தகவல் துறை விரைவில் அரசுத்துறையின் வெளிப்படைத்தன்மை பற்றி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

மத்திய தகவல் துறைக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பல மனுக்கள் வருகின்றன.  இந்தத் துறையானது அந்த மனுக்களை சம்பந்த்தப்பட்ட அரசுத் துறை, அமைச்சகம், அமைச்சர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்து அவர்கள் அளிக்கும் தகவல்களை மனுதாரருக்கு தெரிவிக்கின்றது.  வருடத்துக்கு இந்த துறைக்கு சுமார் 60 லட்சம் மனுக்கள் வருகின்றன.  ஆனால் அதில் சில மனுக்களுக்கான தகவல்கள் மட்டுமே இந்தத் துறைக்கு தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த துறையின் தலைவரான ஆர் கே மாதூர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.  அந்த சந்திப்பில் மாதூர், “வருடத்துக்கு சுமார் 60 லட்சம் மனுக்கள் எங்கள் துறைக்கு வருகின்றன.  அவற்றுக்கான தகவல்களை மனுதாரருக்கு தெரிவித்துள்ள அடிப்படையில் எந்தெந்த அரசுத்துறைகளில் வெளிப்படைத்தன்மை அதிகம் உள்ளது என்பதும், எந்தெந்த துறைகளில் அது குறைவாக இருக்கிறது என்பதும் ஆராயப்பட்டு வருகிறது.  இதன் அடிப்படையில் அரசுத்துறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து விரைவில் ஒரு தரவரிசைப் பட்டியல் வெளியிடப் பட உள்ளது.

இந்த தரவரிசை துறைகள், அதிகாரிகள், அமைச்சகம், மற்றும் அமைச்சர்கள் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ளது.  அந்த வரிசையை சம்பந்தப்பட்ட துறைகள், மற்றும் அமைச்சர்களுக்கு அளிப்பதுடன்,  முன்னேற்றத்துக்கான வழிமுறைகளும் கண்டறியப்பட உள்ளது.” என தெரிவித்தார்.