bjp-meeting_827ee4de-f568-11e5-9a43-23ebef71ce06
கேரளாவைச் சேர்ந்த சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். 2013 ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவர். பிறகு இவர் நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்பட்டவர்.
அவர் தற்போது  கேரள சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் திருவனந்தபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்ட வழக்கின்போது தனக்கு துணை நின்ற கேரள மக்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்பதற்காகவே இவர் அரசியல் களத்தில் குதித்திருக்கிறாராம். அரசியலை இவர் தற்போதைய ஆடுகளமாகத் தேர்ந்தெடுத்தாலும் கிரிக்கெட்மீதுதான் இவருக்கு கொள்ளைப் பிரியமாம். அவருடைய பேட்டியிலிருந்து சில பகுதிகள்….
நீங்கள் திடீரென அரசியலில் குதிக்க என்ன காரணம்?
அரசியலில் சேர வேண்டும் என சில நேரங்களில் நினைத்திருந்தேன். இளைஞர்கள் இன்னும் பெருமளவில் அரசியலுக்கு வரவேண்டும் எனக் கருதுபவன் நான். மக்களுக்கும் தேசத்திற்கும் தொண்டு செய்வதற்கான சரியான வழி அரசியல் மட்டுமே. பாஜக தலைமையுடன் சில காலம் தொடர்பில் இருந்திருக்கிறேன். எனக்கு எல்லாவற்றையும் கொடுத்த விளையாட்டை மட்டும் நான் எப்போதும் கைவிடமாட்டேன். விளையாட்டுக்குள் நான் மீண்டும் திரும்பவேண்டும் என்று  ஒவ்வொரு நாளும் நான் கனவு காண்பவன். ஆனால், அதேவேளை அரசியல் என்பது எனக்கு இடைக்கால ஏற்பாடல்ல
பாஜகவை தேர்வு செய்ய என்ன காரணம்?
பாஜகவின் சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் நான் விரும்புகிறேன். பிரதமர் மோடி அவர்களின் தீவிர ரசிகன் நான். மக்கள் அனைவரும் அவருக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என நினைப்பவன்.
உங்கள் அரசியல் வியூகம் என்னவாக இருக்கும்?
கிரிக்கெட்டைப்போலவே அரசியலிலும் நான் தீவிரமாகவே இருப்பேன். ஆனால் நான் யார் மீதிலும் சேற்றை வாரி இறைக்கமாட்டேன். நான் என்ன செய்யவேண்டும் என்பதை என் தொகுதி மக்கள் என்னிடம் சொல்லட்டும். தொகுதியின் மிக முக்கியமான பிரச்சினைகளை கண்டறியும் பணியினை நான் தொடங்கிவிட்டேன். கேரள மக்கள் இதுவரை இரு முன்னணி கட்சிகளையும் சோதனை செய்து முயற்சித்துப் பார்த்துவிட்டனர். தற்போது பாஜகவுக்கு  ஒரு வாய்ப்புக் கொடுக்கட்டும்.இன்னும் இரண்டொரு நாட்களில் என் தேர்தல் பிரசாரம் தொடங்க உள்ளது.
கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுபடுவதற்காகத்தான் நீங்கள் அரசியலில் குதித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவே…?
இது முற்றிலும் பொய். கிரிக்கெட் சூதாட்டத்தின் அனைத்து வழக்குகளிலிருந்தும் நீதிமன்றம் என்னை முற்றிலும் விடுவித்துவிட்டது. இதை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும். இதுபற்றிய ஒரு புதிய சர்ச்சைக்கு நான் வித்திட விரும்பவில்லை.
உங்களை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் பாஜக தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியிருக்கிறாரே…
இதை நான் கவுரமாகவே எடுத்துக்கொள்கிறேன். ஏனெனில் இந்தக் கருத்து ஒரு நல்ல எழுத்தாளர் மற்றும் நூலாசிரியரிடமிருந்து வந்திருக்கிறது.