மதுரை:
அமைச்சர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் அதிமுக பிரமுகரிடம் போலீசார் விசாரனை மேற்கொண்டனர்.
மாநில கூட்டுறவு துறை அமைச்சரும், மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்லூர ராஜூவின் கட்சி அலுவலகம் மதுரை சம்மட்டிபுரம் பனகல் சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றனர்.
மதுரை அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக எஸ்எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தில் அதிமுக அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் பசும்பொன் பாண்டியனுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.
இதைத் தொடர்ந்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பசும்பொன் பாண்டியனுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். நேரில் ஆஜரான அவரிடம், தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,‘‘ உட்கட்சி பூசல் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் தான் பசும்பொன் பாண்டியனிடம் விசாரணை நடந்தது. அமைச்சருக்கும் இவருக்கும் இடையில் சுமூகமான உறவு இல்லை. மேற்கு தொகுதியில் வளர்ச்சி பணிகள் சரிவர மேற்கொள்ளவில்லை என அமைச்சர் மீது பசும்பொன் குற்றம்சாட்டி பேசி வந்தார்’’ என்றனர்.
எனினும் ‘‘அமைச்சருடன் எனக்கு சுமூக உறவு உள்ளது. எனக்கும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்துக்கும் தொடர்பில்லை என பசும்பொன் தெரிவித்ததாக’’ போலீசார் கூறினர்.
முன்னதாக ‘‘தனது குடும்பத்துக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’’ என பசும்பொன் பாண்டியனின் மனைவி ஏற்கனவே மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர்களான ஜெயராம், கோபி ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அமைச்சர் ஏற்பாடு செய்திருந்த கட்சி கூட்ட இடத்திற்கு அருகில் இருந்து ஒரு நாட்டு வெடிகுண்டையும், இரு பெட்ரோல் வெடிகுண்டையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஆளுங் கட்சியினரிடம் போலீசார் விசாரணை நடத்தியது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.