மெரிக்காவின் அரிசோனா மற்றும் இல்லியனாய்ஸ் மாகாணங்களின் வாக்காளர் பட்டியலை ரஷ்ய உளவாளிகள் ஹேக் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
hacker america
அரிசோனா மற்றும் இல்லியனாய்ஸ் மாகாணங்களின் வாக்காளர் பட்டியலை சிலர் ஊடுருவி தகவல்களை திருடியிருப்பது உண்மை ஆனால் ரஷ்யாதான் இதைச் செய்தது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.  ஆனாலும் இது குறித்து விசாரணை செய்து நவம்பரில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலின் முடிவுகளில் ஏதேனும் குளறுபடிகளை செய்ய ரஷ்யா முயலுகிறதா என்பது பற்றி ஆராயும்படி ஹாரி ரெய்ட் என்ற செனட்டர் எப்.பி.ஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பாதுகாப்பற்றவை என்பதால் தேர்தல் பற்றிய விபரங்கள் எளிதாக ஹேக் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக எப்.பி.ஐ முன்னமே தேர்தல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே முக்கிய அரசியல்வாதிகளின் இமெயில்கள் திருடப்பட்டு விக்கி-லீக்ஸ் போன்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டது அமெரிக்க அரசியலில் பூகம்பத்தைக் கிளப்பி, டெப்பி வாசர்மேன் என்ற அரசியல் தலைவர் பதவி விலகவும் காரணமாக அமைந்தது. இதற்குப் பின்னனியில் ரஷ்யா இருக்கலாம் என்று அமெரிக்க அரசியல்வாதிகள் கருதுகின்றனர்.
இந்நிலையில் இரண்டு மாகாணங்களின் வாக்காளர் விபரங்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பது அமெரிக்க அரசியலில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹேக்கர்களால் தகவல்களை திருடத்தான் முடியுமே தவிர தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2014-ஆம் ஆண்டு உக்ரேனில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் மாற்றியமைத்து குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.