rama
ஈரோடு:
விஜகாந்தின் “தூ”, இளையராஜாவின் “அறிவிருக்கா” , பழ. கருப்பையாவின் “மனநோய்” வரிசையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசும் சேர்ந்துள்ளார். கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நோக்கி, “வெட்கமா இல்லையா” என்று காட்டமாக கேட்டார்.
இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.  மக்கள் நலக்கூட்டணி முதலில் அறிவிக்கப்பட்டது. அடுத்து  திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. மேலும் பல கட்சிகள் கூட்டணி குறித்து மறைமுக பேச்சு வார்த்தகளை நடத்தி வருகின்றன.   ஆனால், பாமக முன்னதாகவே அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி, இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவோம் என்று ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராமதாஸ். அப்போது அவர், “விவசாய விளைநிலங்களின் வழியாக  கெயில் நிறுவனம் கேஸ் குழாய்களை அமைப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். இது குறித்த உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசு  வழக்கை முறையாக நடத்தவில்லை. அதனால்தான் விவசாயிகளுக்கு எதிரான தீர்ப்பு வந்தது.
அதிமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவேயில்லை. மாற்றுத்திறனாளிகளின் கோரிக் கைகளை கூட இந்த அரசு செய்யவில்லை. இதுபற்றி நான் நேரில் வந்து ஜெயா டிவியில் விவாதிக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.
மேலும் ராமதாஸ், ”வருகிற தேர்தலில் பாமக தனித்துதான் நிற்கும். 120 முதல்130 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்”என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், ‘ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தனித்துப்போட்டி போன்று  சொல்கிறீர்கள்.  ஆனால் யாருடனாவது கூட்டணி வைத்து விடுகிறீர்கள். இந்த தேர்தலிலாவது  உங்கள் முடிவில் உறுதியாக இருந்து  தனித்து போட்டியீடுவீர்களா? பொதுவாக, பாமக  ஆரம்பத்தில் இப்படித்தான் பேசும். ஆனால் கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடும் என மக்களிடம் பேச்சு உள்ளதே?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியால் ஆத்திரம் அடைந்த  ராமதாஸ், கேள்வி கேட்ட  செய்தியாளரைப் பார்த்து, ‘இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்குறீங்களே…  உங்களுக்கே வெட்கமாக இல்லையா?’ என்றார்.
இதனால் பத்திரிகையாளர் மத்தியில்  சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.