மீனவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவர்? என ஏங்கி நிற்பது காணச் சகிக்காத காட்சிகள்

Must read

sea-cucumbers
ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை சிங்களப்படை கைது செய்து சிறையில் அடைப்பதும், மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு விடுதலை செய்வதும் வாடிக்கையாகி விட்டது. இடைப்பட்ட காலத்தில் மீனவர்களை பிரிந்த குடும்பங்கள் வறுமையில் வாடுவதும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவர்? என ஏங்கி நிற்பதும் காணச் சகிக்காத காட்சிகள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 40 பேரின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் 4–ந்தேதி வரை நீடித்து அந்நாட்டு நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 96 பேர் நேற்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை நீதிமன்றத்தின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியளிக்கிறது.
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 104 தமிழக மீனவர்கள் பொங்கல் திருநாளில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அதற்கு அடுத்த நாளில் இருந்தே வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைப்பதும், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடங்கி விட்டது.
கடந்த பிப்ரவரி மாத இறுதி வரை 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். மீனவர்களுக்கு சொந்தமான 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. மார்ச் மாதம் 1–ந்தேதி முதல் 13–ந்தேதி வரையிலான 13 நாட்களில் மட்டும் 69 மீனவர்களும், அவர்களுக்கு சொந்தமான 11 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழக்கம் போலவே, இந்த பிரச்சினை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன் கடமை முடிந்து விட்டதாக ஒதுங்கி விட்டார்.
இத்தகைய சூழலில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கான ஆணை மன்னார், பருத்தித்துறை, ஊர்க்காவல்துறை ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அதற்குப் பிறகும் மன்னார் நீதிமன்றத்தில் இன்று நேர்நிறுத்தப்பட்ட 40 மீனவர்கள் விடுதலை செய்யப்படாமல் அவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதன் அடிப்படையை புரிந்து கொள்ள முடியவில்லை.
கைது செய்யப்பட்ட மீனவர்களில் இருவர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர். தமிழக மீனவர்களில் பலர் இரு மாதங்களுக்கும் மேலாக இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழப்பு உட்பட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை சிங்களப்படை கைது செய்து சிறையில் அடைப்பதும், மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு விடுதலை செய்வதும் வாடிக்கையாகி விட்டது. இடைப்பட்ட காலத்தில் மீனவர்களை பிரிந்த குடும்பங்கள் வறுமையில் வாடுவதும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவர்? என ஏங்கி நிற்பதும் காணச் சகிக்காத காட்சிகள் ஆகும்.
அதுமட்டுமின்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பறிமுதல் செய்யப்பட்ட தமிழர்களின் படகுகளை திருப்பித் தர இலங்கை அரசு மறுத்து வருகிறது. பறிமுதல் செய்த 82 படகுகளை திரும்பத் தர மறுப்பது கிட்டத்தட்ட 820 குடும்பங்களின் நேரடி வேலைவாய்ப்பை பறிப்பதாகும்.
2002–ம் ஆண்டில் இந்திய இலங்கை அரசுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தான் இந்த பிரச்சினைக்குக் காரணம். தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதற்கு இந்திய அரசே துணைப்போவது கொடுமையாகும். வேறு எந்த நாட்டிலும் மீனவர்களுக்கு இப்படி ஓர் அநீதி இழைக்கப்படாது. இந்த அநீதியைகளையும் கடமை நரேந்திர மோடி அரசுக்கு தான் உள்ளது.
எனவே, தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வைத்துக்கொள்ள இலங்கை அரசுக்கு அனுமதி அளித்து செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 96 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட 82 படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

More articles

Latest article