t20
இந்திய அணியின் சிறந்த கேப்டன் எனப் புகழப் படும் மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி இருபது ஓவர் உலகப் கோப்பையை வெல்லும் என ஆவலுடன் எதிர்ப் பார்க்கப் படுகின்றது.
ஒவ்வொரு போட்டித் தொடரின் இறுதியிலும் ஒரு ஸ்டம்பினை நினைவுச் சின்னமாகச் சேகரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ள மகேந்திர சிங் தோனி மற்றுமொரு ஸ்டம்பினை T20 உலகக் கோப்பையின் முடிவில் சேர்ப்பது உறுதி என்பது தற்பொழுதைய இந்திய அணியின் சிறந்த செயல்திறனைப் பார்க்கையில் புரிகின்றது .
ஆறாவது T20 உலகக் கோப்பை போட்டியில் காலடி வைக்கும்போதே, முதல் T20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணியாக நுழைகின்றது . கடந்த 11 ஆட்டங்களில் 10 ஆட்டங்களை வென்றுள்ளது இந்திய அணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியா அணியை 3-0 என்று பதம் பார்த்த இந்திய அணி அதன் பிறகு வங்கதேசத்தை வீழ்த்தி ஆசியக் கோப்பையும் வென்று வலுவான அணியாகத் திகழ்கின்றது.
இதே உத்வேகத்துடன் இந்திய அணி இரண்டாமுறையாக T20-உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. தாய் மண்ணில் இச்சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பு தோனிக்கு வாய்த்துள்ளது.
அதே வேளையில் , தாய்மண்ணில் விளையாடும்போது கோடிக் கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சவாலும் இந்திய அணிக்கு உள்ளது. இதனை இலகுவாகச் செய்து முடிப்பதாலேயே சிறந்த அணித்தலைவர் என்று தோனி அழைக்கப் படுகின்றார்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஏப்ரல் மாத இரவில் அமைதியாய் ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை வென்றெடுத்த தோனியின் வசம் இந்த ஏப்ரல் மாதத்தில் இருபது ஓவர் உலகக் கோப்பையை வெல்லத் தேவையான அனைத்து அம்சங்களும் அளவுக்கதிகமாகவே உள்ளன .
உதாரணத்திற்கு ரோகித் சர்மா மற்றும் சிக்கந்தர் தவன் வலது-இடது இணையில் சிறந்த துவக்கத்தை ஏற்படுத்தித் தருகின்றனர் . தொடர்ந்து ஆட வரும் விராத் கோலி முக்கியப் பங்களிப்பைத் தருகின்றார். இம்மூவரும் தனி ஆளாகவே அணிக்கு வெற்றியைத் தேடித்தர வல்லவர்கள் என்றால் அது மிகையாகாது .
சுரேஷ் ரைனா மற்றும் தோனி ஆகியோர் ஆட்டத்தின் போக்கை நொடிப் பொழுதில் மாற்றியமைக்கும் வீர்கள் உள்ளது இந்திய அணிக்குக் கிடைத்த வரம் . மேலும் இளம் புயல் ஹர்திக் பாண்டியாவும் விரைவாக ரன்கள் குவிக்கும் ஆற்றலை வெளிப் படுத்தி உள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.
முக்கியமாகப் பந்துவீச்சில் , தோனிக்கு நிம்மதிப் பெருமூச்சாக இறுதிக் கட்ட பந்துவீச்சு பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்துள்ளது . ஆம் . ஜஸ்ப்ரீத் பூம்ரா வின் வடிவில், அத்திப் பூத்தார்ப் போல், நினைத்த மாத்திரத்தில் யார்க்கர் வீசும் ஒரு பந்துவீச்சாளர் இந்திய அணிக்குக் கிடைத்துள்ளார். மேலும் அவரது விசித்திர பந்துவீசும் முறை அவரது பந்துவீச்சினை எதிர்கொள்வதில் மட்டையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்வினின் பந்துவீச்சு சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
முகமது சாமி யின் உடற்தகுதியைத் தவிர்த்து இந்திய அணிக்கு எந்தச் சிக்கலும் இதுவரை இல்லை எனலாம் .
சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட தோனி ஓய்விற்கு பிறகு தாம் சேமித்து வைத்துள்ள அடையாளப் படுத்தப் படாத ஸ்டம்புகளை இனம் கண்டுபிடிக்க காணொளிகளைப் பார்த்து பொழுதைக் கழிக்க விரும்புவதாகவும் , இந்த உலகக் கோப்பையிலும் ஒரு ஸ்டம்பினை சேகரிக்க ஆர்வமாக உள்ளதாகவும் தோனி கூறியுள்ளார்.
அவர் விருப்பம் நிறைவேறுமா , இந்திய அணி இரண்டாம் முறை T20 உலகக் கோப்பையை வெல்லுமா .. பொறுத்திருப்போம் ஏப்ரல் 3 தேதிவரை !!