2

ந்திரா, ராஜீவ் தபால் தலைகளை தடைசெய்ததோடு, புழக்கத்தில் இருந்தவைகளையும் திரும்பப்பெற உத்தரவிட்டது மத்திய அரசு. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தினாலும், மத்திய அரசு தனது முடிவில் உறுதியாக இருக்கிறது.

அடுத்ததாக பெரியார் படம் அச்சிடப்பட்டுள்ள தபால்தலைகளையும் தடை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்திடம் பேசினோம்.

“தனிப்பட்ட யாருக்குமே ஸ்டாம்ப் தேவையில்லை என்பதே எங்கள் கருத்து. நான் பல வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கே கட்சிகளுக்கு கொடியே கிடையாது. அந்தந்த நாட்டு தேசியக்கொடியைத்தான் பயன்படுத்துகிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் இங்கே சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அங்கே அப்படி இல்லை.

ஆளுக்கொரு கொடி, தபால் தலை, மணிமண்டம் என்பதெல்லாம் தனிமனித துதியையே வளர்க்கும். அது சமுதாயத்துக்கே கேடு. ஆகவே எந்த ஒரு தனி நபருக்கும் ஸ்டாம்ப் வெளியிட தேவையில்லை. அதுவும் குறிப்பாக ஈ.வெ.ராவின் ஸ்டாம்ப் இருப்பது நாட்டுக்கே அவமானம்.

அவரது ஸ்டாம்புகளை தடை செய்வது பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தால் போதாது. உடனடியாக தடை செய்யவேண்டும். தமதமானால் நாங்களே தடை செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு கோரிக்கை வைப்போம். கடிதம் எழுதுவோம்” என்றவரிடம், நமது கேள்விகளை வைத்தோம்.

குறிப்பாக ஏன் பெரியார் தபால்தலை பற்றி குறிப்பிடுகிறீர்கள்?

திராவிட இயக்கத்தினருக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் இருந்த தொடர்பு எல்லோருக்கும் தெரியும். பிரிட்டிஷ்காரர்களின் எடுபிடியாக இருந்தவர்கள்தான் திராவிட தலைவர்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டாம் பிரிட்டிஸாரே ஆளட்டும் என்றவர்கள் இவர்கள்.

இவர்களுக்கு தலைவராக இருந்தவர்தானே ஈ.வெ.ராமசாமி? பாரத சுதந்திர தினத்தை துக்க நாளாக கடைபிடித்து இந்தியாவுக்கு துரோகம் இழைத்தவர் அவர். அவர் ஒரு தேசத்துரோகி. தவிர அவர் தமிழரே கிடையாது. அவருக்கு எதற்காக ஸ்டாம்ப்?

அவரது சமுதாய பணிகளை பல்வேறு தரப்பினரும் பாராட்டியிருக்கிறார்கள். யுனெஸ்கோவே பெரியாரின் பணிகளை புகழ்ந்திருக்கிறதே..

யுனெஸ்கோ மாதிரி அமைப்புகள் எல்லாம் கிறிஸ்தவ சார்பு நிறுவனங்கள். இந்து மதத்தில் குழப்பம் செய்தவர்களை அந்த அமைப்புகள் புகழும்.

ராமானுஜரை அந்த அமைப்பினர் புரட்சியாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் பெரியாரைத்தான் சொல்வார்கள். பாரதியாரை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள், பாரதிதாசனை கொண்டாடுவார்கள்.

தமிழர் தலைவர் என்றால் ராஜராஜனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். திராவிட தந்தை என கார்டுவெல் என்ற கிறிஸ்தவரைத்தான் சொல்வார்கள். இன்றைக்கும் அந்த மோசமான பழக்கம் தொடர்கிறது. தமிழர் அமைப்பு என்றால், ஜெகத்கஸ்பர் வைத்திருக்கும் அமைப்பைச் சொல்வார்கள்.

ஆகவே யுனெஸ்கோ சொன்னதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.

பெரியார் மீது இவ்வளவு புகார் சொல்கிறீர்கள். அப்படிப்பட்டவருக்கு ஏன் ஏற்கெனவே மத்திய அரசு ஸ்டாம்ப் வெளியிட்டது?

நமது ஜனநாயகத்தில் உள்ள வெட்கட்கேடான விஷயங்களில் இதுவும் ஒன்று. கடந்தகால காங்கிரஸ் கட்சி செய்த முட்டாள்த்தனம் அது. ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து விட்டால் அந்த கூட்டணியினர் சுட்டிக்காட்டுபவருக்கு ஸ்டாம்ப் வெளியிடுவார்கள், விருதுகள் கொடுப்பார்கள்.

மிகப்பெரிய வெட்கட்கேடு என்னவென்றால், எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்ட பிறகுதான் நேதாஜிக்கு கொடுக்கப்பட்டது. என்னத்தைச் சொல்வது?

ஆனால் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அல்லவா பெரியார்?

அவர் பெயரைச் சொல்லித்தானே ஆண்டார்கள், ஆள்கிறார்கள்.. பிறகு எப்படி அவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் ஆவார்? ஈ.வெ.ரா. உயிருடன் இருந்தபோதே காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவர்தானே. அது கட்சி அரசியல் இல்லையா?

ஒருவேளை பெரியார் ஸ்டாம்புகளை மத்திய அரசு திரும்பப்பெற்றால் பகுத்தறிவாளர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்குமே?

என்ன பெரிய பகுத்தறிவுவாதிகள்? உருவ வழிபாடு வேண்டாம் என்ற ஈ.வே.ரா.வின் சிலையை இவர்கள் வணங்குகிறார்கள். அந்த சிலைக்கு கற்பூரம், ஊதுவத்திகூட காட்டுகிறார்கள். ஈ.வெ.ராவின் சமாதிக்கு சென்று கும்பிடுகிறார்கள்.

உண்மையிலேயே பெரியார் சொல்வதை இவர்கள் ஏற்கிறார்கள் என்றால், “உருவ வழிபாடு கூடாது. அதன் ஒருபகுதியாக, பெரியார் ஸ்டாம்புகளை வாபஸ் பெற வேண்டும்” என ஈ.வெ.ராவை பின்பற்றுவதாகச் சொல்பவர்களே மத்திய அரசைக் கேட்க வேண்டும்.