ரஜினிகாந்த்

 

சென்னை:

வரும் பன்னிரண்டாம் தேதி வரும் தனது பிறந்த நாளை முன்னிட்டு, வெள்ள நிவாரணத்துக்காக ரஜினிகாந்த் 10 கோடி ரூபாய் நிதி அளித்ததாக ஒரு நாளிதழிலும், சில இணைய இதழ்களிலும் தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. விசாரித்ததில் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநால் வரும் பன்னிரண்டாம் தேதி வருகிறது. வெள்ளத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். அதோடு பத்து லட்ச ரூபாய் நிதியும் அளித்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் வெள்ள நிவாரண நிதியாக பத்து கோடி ரூபாய் அளித்ததாக ஒரு நாளிதழ் மற்றும் இரு இணைய இதழ்களில் தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

அதே நேரம், கடந்த சில நாட்களாக நிவாரணப் பொருள்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் அனுப்பி வைத்து வருகிறார் ரஜினிகாந்த். ராகவேந்திரா மண்டபத்திலும், தனுஷின் அலுவலகத்திலும் வைத்து இந்த நிவாரணப் பொருள்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதையும் சிலர், ஐந்து கோடி ரூபாய் மதிப்புக்கு பொருட்கள் அனுப்பப்படுவதாக புரளி கிளப்பி வருகிறார்கள்.

நதி நீர் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தருவதாக சொன்ன ரஜினி, நதி நீர் இணைப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.