தேமுதிக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்

Must read

 
dmdk theermaanam
தேசிய முற்போக்கு திராவிட கழகம் செயற்குழு கூட்டம் தேமுதிக தலைமை கழகத்தில் இன்று காலை நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்:
தீர்மானம் – 1
09.01.2016 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், 2016 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரத்தையும், கழக நிறுவனத்தலைவரும், கழக பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒரு நல்ல ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் வகையில் தேமுதிக தலைமையில் மதிமுக, தமாகா, சி.பி.ஐ.(எம்), வி.சி.க, சி.பி.ஐ, ஆகிய கட்சிகளுடன் ஒரு மெகா கூட்டணி அமைத்த கழகத்தலைவர் கேப்டன் அவர்களுக்கு இச்செயற்குழு நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் – 2
தேசிய முற்போக்கு திராவிடம் துவங்கப்பட்டதன் நோக்கம் தமிழகத்தில் மலிந்து கிடக்கின்ற லஞ்சம், ஊழல், சட்ட ஒழுங்கு சீர்கேடு போன்ற மக்கள் விரோத செயல்களை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும், அதிமுக, திமுகவிற்கு மாறாக தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே தேமுதிகவை கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் துவக்கினார். எதிர்வரும் 2016 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான அதிகாரத்தை பெரம்பலூரில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கியது முதல், தொடர்ந்து நமது கழகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு வந்த வி.சி.சந்திரகுமார், 23.03.2016 அன்று மக்கள் நலக்கூட்டணி கட்சி தலைவர்கள் நம் தலைமை கழகத்திற்கு வந்து, தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி தொகுதி உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு, கழகத்தலைவர் கேப்டன் அவர்களை தமிழக முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்கள். அன்றைய நிகழ்ச்சியில் வி.சி.சந்திரகுமார் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார். அதை தொடர்ந்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்களோடு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். ஈரோடு மாநகரில் 03.04.2016 அன்று திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய தேமுதிகவின் “தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்திலும்” கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். 05.04.2016 தலைமை கழகத்தில் தேர்தல் சம்பந்தமாக ஆலோசிப்பதற்காக, தலைமை கழக நிர்வாகிகளும், உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக கொள்கைபரப்பு செயலாளரான வி.சி.சந்திரகுமார், கழக துணைச்செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. மாறாக கூட்டம் நடைபெற்றுகொண்டிருக்கும் போது வி.சி.சந்திரகுமார் செய்தியாளர்களை சந்திப்பதாக தகவல் வந்தது. பத்திரிக்கையாளர்களை சந்தித்த வி.சி.சந்திரக்குமார் கழகத்தையும், கழகத்தலைவரையும், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி அவதூறான செய்திகளையும், பொய்யான தகவல்களையும் கழகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் செய்தியாளர்களிடம் பேட்டியளிப்பதை தொலைக்காட்சியில் கண்டோம். உடனடியாக அவரையும், அவருடன் சேர்ந்திருந்தவர்களையும் கழக பதிவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கம் செய்யவும், விளக்கம் கேட்கவும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவை ஏற்று உடனடியாக சம்மந்தப்பட்ட கழக கொள்கைபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார், கழக துணைச்செயலாளர் பி.முருகேசன், உயர்மட்டக்குழு உறுப்பினர் கே.ஆர்.வீரப்பன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.எச்.சேகர், சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வேலூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெ.விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர் இமயம் என்.எஸ்.சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.செந்தில்குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் உடனடியாக கழக பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தமைக்கு இச்செயற்குழு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கிறது, மேலும் விரைந்து நடவடிக்கை எடுத்த உயர்மட்ட குழுவையும், கழகத்தலைவர் விஜயகாந்த் அவர்களையும் பாராட்டுகிறது.
தீர்மானம் – 3
தமிழகத்தில் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டால், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவும், ஆட்சியில் இருந்த திமுகவும் பணபலத்தால், தமிழக வாக்காளர்களை விலைக்கு வாங்குவது வாடிக்கையாகிவிட்டது. அதை ஒப்புக்கொள்ளும் வகையில் தேர்தல் அதிகாரிகளே தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை என்று கடந்த காலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்கள். நடைபெறவிருக்கும் 2016 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் பணமூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருபதாகவும், பல கண்டைனர் லாரிகளில் அதை ஏற்றி தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அனுப்பி, வாக்களர்களுக்கு பணம் கொடுக்கவிருப்பதாக பத்திரிக்கைகளும், ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன. பல அரசியல் கட்சிகளின் சார்பில் தேர்தல் அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டு, நடவடிக்கை எடுக்கவேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் அதிமுகவினருக்கு சாதகமாக செயல்பட்டு, சிறுதாவூர் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை பறிமுதல் செய்யாமல், தவறவிட்டிருப்பதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்தும், ஆளும் ஆட்சியாளர்கள் ஆதரவாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து இப்பொதுத்தேர்தலை நடுநிலையோடு நடத்தவேண்டுமென இச்செயற்குழு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது.
தீர்மானம் – 4
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட திட்டம் தீட்டி, நிதி ஒதுக்கீடு செய்து, பணி துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் இப்பிரச்சனையை வைத்து அரசியல் செய்வது இருமாநில அரசியல் கட்சிகளுக்கும் வாடிக்கையாகிவிட்டது. தமிழகத்தில் பெய்த அபரிமிதமான மழைநீரை சேமித்து இருந்தாலோ, தமிழக நீர் நிலைகளை முறையாக பராமரித்து இருந்தாலோ, இந்தநிலை ஏற்பட்டிருக்காது. இருமாநில விவசாயிகளுக்கும் பிரச்சினை இல்லாதொரு தீர்வை எட்ட இரண்டு அரசுகளும் தவறிவிட்டது. தற்போது ஆளும் ஆதிமுக அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுக்கத்தவறியதை இந்த செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இருமாநில விவசாயிகளுக்கும் நியாயம் கிடைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்க இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் – 5
ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு கர்நாடகத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கை பதினெட்டு ஆண்டுகள் ஜெயலலிதா தரப்பு இழுத்தடித்ததை இந்த நாடறியும். பதினெட்டு ஆண்டுகள் விசாரித்து விசாரையின் முடிவில் 1130 பக்கம் கொண்ட தீர்ப்பை கர்நாடக நீதிமன்ற நீதிபதி மைகேல் டி குன்ஹா வழங்கினார். அந்த தீர்ப்பில் ஜெயலலிதா குற்றவாளி என்றும், ஜெயலலிதாவிற்கு நான்காண்டு சிறை தண்டனையும், 100 கோடி அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தடை ஆணை பெற்று பதினெட்டு ஆண்டுகள் நடைபெற்ற வழக்கை 3 மாதத்திற்குள் நடத்தியாகவேண்டும் என்ற ஆணையை பெற்றார். தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருந்த ஜெயலலிதாவும், ஜெயலலிதா தரப்பும் பணம் பாதாளம் வரை பாயும் என்பதை உறுதிபடுத்தும் வகையில் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் விடுதலை பெற்றார். கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பின் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதாவினுடைய அரசியல் வாழ்க்கை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில்தான் உள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் சட்டத்திற்கும், தமிழக மக்களுக்கும் செய்த துரோகத்திற்கு நிச்சயமாக உப்பைத்தின்றவன் தண்ணீர் குடித்தாகவேண்டும் என்பதுபோல ஜெயலலிதா செய்த தவறுக்கு உச்சநீதிமன்றம் உரிய தண்டனை வழங்கும் என்று இச்செயற்குழு நம்புகிறது.
தீர்மானம் – 6
1989க்கு பிறகு தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் தமிழகத்தை ஒரு கடன் நிறைந்த மாநிலமாக மாற்றியுள்ளது. 2011 ஆம் வருடம் ஒரு லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் இந்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாயாகவும், அரசு பொது நிறுவனங்களான போக்குவரத்துத்துறை, மின்வாரியம் போன்ற பொதுத்துறையின் கடன்களையும் சேர்த்து 4 லட்சத்து 42 ஆயிரம் கோடி கடன் சுமையை அதிமுக அரசு தமிழக மக்கள் மீது சுமத்தியுள்ளது, தமிழக அரசு திவாலாகும் நிலையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய நிர்வாக திறமையின்மையால் உருவாக்கியுள்ளதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானம் – 7
தேசிய முற்போக்கு திராவிட கழகம் எந்த நோக்கத்திற்காக 2005ல் துவங்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் காலம் கனிந்துள்ளது. ரசிகர்களின் வேண்டுகோள், தொண்டர்களின் உழைப்பால் இயக்கம் உருவானது. நம்முடைய இயக்கத்தின் லட்சியம் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகம் பெறுவதுதான். கழகத்தலைவர் கேப்டன் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக்குவதுதான் நம்முடைய நோக்கம். இந்த 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி, தமாக என்ற ஒரு மெகா கூட்டணி அமைத்து நாம் இந்த தேர்தலை சந்திக்கிறோம். தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக, திமுக தொடர்ந்து லஞ்சம், ஊழல், சொத்துக்குவிப்பு, 2G அலைக்கற்றை வழக்கு என்று எப்போது தண்டிக்கபடுவார்கள் என்று மக்கள் எதிர்பார்கின்ற நிலை உள்ளது. அவர்கள் மீது மக்கள் வெறுப்பின் உட்சத்தில் இருப்பதை உணர முடிகிறது. தமிழக பெரியோர்கள், இளைஞர்கள், பட்டதாரிகள், தாய்மார்கள் புதிய வாக்காளர்கள் என அனைவரும் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என எண்ணுகிறார்கள். தமிழக மக்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பொதுத்தேர்தலில் பொதுமக்களை சந்தித்து தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, தமாகா இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறோம். முழுமையாக கழக அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும், மகளிரணியை சார்ந்த சகோதரிகளும், சார்பு அணியை சார்ந்த நிர்வாகிகளும் தேர்தல் களத்தில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்குகள் சேகரித்து கழகத்தலைவர் அறிவிக்கின்ற கழக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் முழுமையாக வெற்றிபெறச்செய்து கழகத்தலைவர் கேப்டன் அவர்களை தமிழக முதலமைச்சராக்குவோம் என்று இச்செயற்குழு உறுதி ஏற்கிறது. ’’

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article