ஃபைல் போட்டோ
ஃபைல் போட்டோ

லராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.கவின் “அரசியல் திருப்புமுனை மாநாடு”   இன்று மாலைியல் துவங்கி இரவில்  முடிந்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம், “வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தனது  கட்சி, யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை விஜயகாந்த் அறிவிப்பார்” என்று பல ஊடகங்கள் யூகத்தை தெரிவித்திருந்தன.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும், இதே போல விஜயகாந்த் கூட்டங்கள் நடத்தியபோதெல்லாம், “இதோ, தனது கூட்டணி யாருடன் என்பதை அறிவிக்கப்போகிறார்”  என்று பல ஊடகங்கள் யூகத்தை வெளியிட்டன.
விஜகாந்தும், “கூட்டணி வைக்கலாமா.. தனியா நிக்கலாமா” என்று மேடையில் இருந்து தொண்டர்களை கேட்டார்.   தொண்டர்கள் “தனித்து நிற்போம்” என்பதாக  கோசம் போட்டார்கள். . “கேளுங்க.. பத்திரிகையாளர்களே..” என்பார் விஜயகாந்த். ஆனால் அந்த கூட்டங்களில் எல்லாம்  விஜகாந்த்  எந்த முடிவையும் அறிவித்ததில்லை.
அதோ போலத்தான் இன்றைய “திருப்புமுனை” (!) மாநாட்டிலும் நடந்திருக்கிறது. ஆனால் தொண்டர்களை நோக்கி கேட்கப்பட்ட கேள்விதான் வேறு.
இன்றைய கூட்டத்தில் விஜயகாந்துக்கு முன்னதாக பேசிய பிரேமலதா, “நம்ம கேப்டன், கிங்கா இருக்கணுமா? கிங் மேக்கரா இருக்கணுமா?”  என்று கேட்டார். தொண்டர்கள் “கிங்.. கிங்..” என்று கோசம் இட்டார்கள்.
பிறகு பேச வந்த விஜயகாந்த், ஆரம்பத்தில் ஏதேதோ தொடர்பற்று பேசி, பிறகு அ.தி.மு.கவை தாக்கிப்பேசினார்.  கடைசியாக, “நான் கிங்கா இருக்கணுமா.. கிங் மேக்கரா இருக்கணுமா” என்ற கேள்வியை அவரும் எழுப்பினார்.
தொண்டர்கள் மீண்டும் “கிங், கிங்” என்று முழக்கமிட்டார்கள்.
மறுபடி மறுபடி இதே கேள்வியைக் கேட்டார் விஜயகாந்த். “எனக்கு காதுல விழலை.. மறுபடி சொல்லுங்க..” என்றார். பிறகு, “பத்திரிகையாளர்களுக்கு கேட்கற மாதிரி  சொல்லுங்க” என்றார்.
தொண்டர்களும் தொண்டைத்தண்ணி வறண்டு போகுமளவுக்கு, “கிங் தான், கிங்தான்” என்று கோசம் போட்டார்கள்.
ஆனால், தனது முடிவு என்ன என்பதை விஜயகாந்த் சொல்லவில்லை. “நான் கிங்குன்னா, நீங்களும் கிங்குதான்..” என்றவர், “ரொம்ப நேரம் பேசிட்டேன்.. மன்னிச்சுக்குங்க. பத்திரமா வீட்டுக்கு  போய் சேருங்க” என்று சொல்லி, தனது பேச்சை முடித்துக்கொண்டார்.
“கிங்கா, கிங் மேக்கரா” என்ற கேள்விக்கு விஜயகாந்த் பதில் சொல்லாவிட்டாலும், இந்த கேள்வியை அவர் எழுப்பியதே, கவனிக்க வேண்டிய விசயம்.
இதுநாள் வரை அவரும், அவரது மனைவியும் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் தொண்டர்களும், “கேப்டன்தான் அடுத்த முதல்வர்” என்றே முழங்கினார்கள்.
இப்போது அவர்களது மனதில், நம்மால் கிங் ஆகமுடியாது. கிங் மேக்கராகவாவது ஆகலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது.
அந்த வகையில், பார்த்தால் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் மனநிலையில் இருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.
மக்கள் நலக்கூட்டணியில் தற்போது உள்ள நான்கு கட்சிகளை வெல்லும் பலம் வாய்ந்த கட்சிகளாக விஜயகாந்த் பார்க்கவில்லை. “அவங்க நல்லவங்கதான்” என்று சர்டிபிகேட்டே கொடுத்தாரே தவிர, அக்கூட்டணியில் இணைவதாக கூறவே இல்லை. இத்தனைக்கும் அந்த கூட்டணியின் நான்கு கட்சி தலைவர்களும் விஜயகாந்தை வருந்தி வருந்தி அழைக்கவே செய்கிறார்கள்.
ஆக, மக்கள் நலக்கூட்டணி என்பது விஜயகாந்த் மனதில் இல்லை.
சரி பா.ஜ.கவுடன் சேர்ந்து, கிங் மேக்கர் ஆகப்போகிறாரா?
இது நகைப்பிற்கிடமான கேள்வியாகவே இருக்கும். பாஜக – தேமுதிக இணைந்து போட்டியிட்டாலும் வெற்றி என்பது எட்டாக்கனிதான். ஆகவே கிங், கிங் மேக்கர் என்பதற்கான கேள்வியே அங்கே எழ வாய்ப்பில்லை.
ஆக, தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து கிங் மேக்கர் ஆகலாம் என்பதுதான் விஜயகாந்த் விருப்பம். ஏனென்றால் அதற்குத்தான் வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இன்றைய மாநாட்டு மேடையிலேயே பிரேமலதா தி.மு.கவையும் சாடினார். மக்களை பீடித்த சாபக்கேடு திமுக என்றார்.
பிறகு எப்படி திமுகவுடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்வி எழலாம். அதற்கு நாம் பதில் சொல்வதைவிட, தி.மு.க. பிரமுகர் கண்ணதாசன் நியூஸ் 7 தொலைக்காட்சியில் இதற்கு சரியான விளக்கத்தைக் கொடுத்தார்:
“இப்போதைய யதார்த்தம் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் என்பதுதான்.  அப்போதுதான் தே.மு.திகவும் வலிமை பெற முடியும். அக் கட்சியின் எதிர்காலத்துக்கு அதுதான் நல்லது.  ஆனால் தனது பேர பலத்தை அதிகப்படுத்தி அதிக சீட் பெறுவதற்காக தனது முடிவை வெளிப்படையாக அறிவிக்காமல் இருக்கிறார் விஜகாந்த்! சரியான நேரத்தில் தி.மு.க. கூட்டணிக்கு வருவார்!”
ஆம்… அதுதான் நடக்கும் என்று தோன்றுகிறது!

  • டி.வி.எஸ். சோமு